உடலை மறைப்பதற்காக உடுத்த ஆரம்பித்த காலத்திலிருந்து,
இன்று வரை, உடுத்தல் எனும் வழக்கம் பல வழக்குகளை சந்தித்துக் கொண்டுதான்
இருக்கின்றது.
பெண்களின் உடுத்தல் பற்றி விமர்சித்து
சமீபத்தில் சர்ச்சையில் சிக்கிக்கொண்டுள்ள தமிழ் இதழைப் பற்றி அனைவரும் அறிவோம். இவ்வகையான
சர்ச்சைகள் அனைத்தும் நமக்கு உரக்கக் கூறுவது நாகரீகத்தையோ கலாச்சாரத்தைப்
பற்றியல்ல. மாறாக, சமூக கட்டமைப்பும், பெண்களை பொருளாகப் பார்க்கும்
பெரும்பான்மையினரின் அறியாமயினைப் பற்றியே வெளிச்சமிட்டு காட்டுகின்றன.
உடுத்தலைப் பற்றி விவாதிப்பதற்கு முன்பு,
உடையைப் பற்றியும் அதன் பின்னணிப் பற்றியும் தெரிந்து கொள்வது அவசியம். ஆதிகால மனிதன்
தன் உடலை பிற விலங்குகள் மற்றும் பூச்சிகள் போன்றவற்றிடமிருந்து காத்துக்
கொள்வதற்காகவும், இயற்கையின் கால மாற்றங்களை தாங்கிக்கொள்ளவும், இன்ன
பிற அழிவிலிருந்து தற்காத்துக்கொள்வதற்காகவும் வடிவமைக்கப் பட்டதே ‘உடை’.
அதுவே காலடைவில் நாகரீகமாக கருதப்பட்டு, வாழ்க்கைத் தரத்தின் அடையாளமாகவும்
மாற்றப்பட்டு விட்டது.
இருக்கும் சூழலுக்கேற்ப, வசிக்கும்
சுற்றுசூழலுக்கு ஏற்ப, மக்கள் ஆடைகளை வடிவமைத்துக் கொண்டார்களே தவிர ஆபாசம் என்ற
அளவு கோலினை வைத்து ஆடைகள் வடிவமைக்கப்படவில்லை.
இன்னும் சொல்லப் போனால், ஒரு நாட்டிற்கென
தனி உடை என்பதும் கிடையாது. காலத்திற்கேற்ப, வசதிக்கேற்ப உடைகள் மாறிக் கொண்டே தான்
இருக்கின்றன.
இலை தழைகளை கொண்டு உடுத்திக் கொண்ட காலம்
மாறி, தோலினை கொண்டு உடுத்தும் காலம் வந்தது, முக்கியப் பாகங்களை மட்டும் மறைத்துக்
கொண்ட காலம் மாறி முழுக்க போர்த்திக் கொள்ளும் காலம் வந்தது, ரவிக்கை அணிய மறுத்த
பெண்கள் மாறி முழு நீள ரவிக்கைகள் காட்சியளித்தன, சுற்றிக் கொள்ளும் புடவை மாறி பற்றிக்கொள்ளும்
சுடிதார் இலகுவாய் இருந்து, காற்றில் பறக்கும் துப்பட்டாக்களை விட கட்சிதமாய் இருக்கும்
சட்டை வசதியாய் இருக்கிறது.
இப்படி பெண்களுக்கு மட்டுமல்லாமல் ஆண்களுக்கும்
உடை என்பது வசதிக்கேற்ப, காலத்திற்கேற்ப மாறிக்கொண்டே தான் இருக்கின்றது.
இருப்பினும் பெரும்பாலும் விமர்சிக்கப் படுவது பெண்களின் உடைகள் தான் என்பதும்
குறிப்பிடத் தக்கது.
உடை என்பது தனி மனித விருப்பம் தொடர்பான
வழக்கமே தவிர ஒரு சமூகத்தின் குறியீடல்ல. கலாச்சாரங்களையும் வழக்கங்களையும்
வசதிகளையும் ஒன்றோடொன்று குழப்பிக்கொண்டு அருவருப்பான விமர்சனங்களைத் தருவது, எந்த
ஊடகத்திற்கும் அழகல்ல.
கண் கூசும் உடையென்று ஒருவர் கருதுவது
பிறருக்கு சாதரணமாக தொனிக்கலாம். ஒருவர் அத்தியாவசியமாக கருதும் ஒரு வகை உடை,
மற்றொருவருக்கு அனாவசியமாக தோன்றலாம்.
உடைக் கட்டுப்பாடு அவசியமற்றது
என்பதல்ல என் வாதம். அதனை விடவும் அவசியமானது மனக் கட்டுப்பாடு. காற்றில் களையும்
முந்தானைகள், தழைந்து போகும் கொசுவங்கள், பறந்திடும் துப்பட்டாக்கள், வடிவம்
காட்டும் காலுறைகள் என எல்லாவற்றிலும் ஆபாசத்தை மட்டும் காணும் மாக்கள், மடித்துக்
கட்டும் வேட்டி, ஜாக்கி தெரியும் படி அணியப்படும் காற்சட்டை, முட்டி காட்டும் அரைக்கால்சட்டை,
மார் காட்டும் உள்சட்டை என இவற்றைப் பற்றியும் விவாதிப்பதற்கு என்ன?
ஒரு உடை ஆபாசமாக
இருக்கின்றதோ இல்லையோ, அதனை யாரும் அறியாமல் படம் பிடித்து வெளியிடுவது என்பது
கீழ்த்தரமான செயல். சமூகத்தை சரியான வழியில் கொண்டு சேர்க்க வேண்டிய ஊடகங்கள், இப்படி
கண்டதை காட்சிப்படுத்தினால், நாம்வாழும் சமூகத்தின் மேல் இருக்கும் நம்பிக்கை காணாமல்
போய்விடும். படக்கருவியும் பேனாவும் இருந்துவிட்டால் என்ன வேண்டுமானாலும் சாதித்து
விடலாம் என்று நீங்கள் எண்ணியிருந்தால், மன்னிக்கவும்! ஊடகங்களுக்கான சுதந்திரத்தை
நீங்களே மாய்த்துக்கொள்ளும் செயலில் ஈடுபட்டுள்ளீர்கள்!
பெண்களை, காட்சிப் பொருளாகக் காண்பது தவறெனில்,
அவர்களைக் காட்சிப் பொருளாக சித்தரிப்பது என்பது அதை விடக் கொடிது. உடல் என்பது
வெறும் சதைப் பிண்டம் தான் என்பதனை எடுத்துரைக்க வேண்டியவர்கள் எல்லாம், பெண்களை இழிவுப்
படுத்த உடுத்தலை கையிலெடுப்பது கவலையளிக்கின்றது.
இவை அனைத்தையும் தாண்டி, பெண்களுக்கு, தான்
இருக்கும் சமூகம் பற்றி அறிந்து கொள்ள இது ஒரு வாய்ப்பு. ஒரு இரவில் நிகழ்வதல்ல
இந்த மாற்றம். காலம் கனியும் வரை காற்றினை எதிர்கொண்டு தான் ஆக வேண்டும்.
அடிப்படையிலேயே திருத்திக் கொள்ளத் தவறி
விட்ட சமூகமாய் இருப்பின், நாளைய அடுப்பங்கரைகள் அழுகுரல்களை மட்டும் தான் எதிரொலிக்கும்.
வாலியின் வரிகள் தான் நினைவிற்கு
வருகின்றன. ‘அக்கடான்னு நாங்க உடை போட்டா, துக்கடான்னு நீங்க எடை போட்டா, தடா..
உனக்குத் தடா!’
-
வசு