Sunday, 13 December 2015

இயற்கையின் காஸ்ட்லி மிஷன்!

வெள்ளம் வடிந்து கொண்டிருக்கிறது. சென்னையை மீட்டெடுக்கும் பணிகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர். நடந்தவை எல்லாம் ஒரு கனவு போல் உள்ளது! சென்னையில் நான் இறங்கிய நாள் முதல் மழை. பயமுறுத்தும் மேகங்களைப்பற்றி அச்சத்துடன் அம்மாவிடம் அவ்வப்போது  சொல்லிக் கொண்டிருந்தபோது கூட தெரியவில்லை, பெய்யவிருக்கும் அந்த மழை,  பெருவெள்ளமாகி எவற்றையெல்லாம் அடித்துக் கொண்டு போகப் போகிறது என்று.
ஒற்றுமை, வேற்றுமை, சாதி, மதம், பண்பு, மனிதம், மக்கள், இளைஞர், நடிகர், இணையம், அரசியல், பணம், பலம் என்று எதைப் பற்றியெல்லாமோ பேசவைத்தது இந்த வெள்ளம். ஒரு யுகத்திற்கான செய்தியினை உள்ளடக்கியுள்ள நிகழ்வினை இந்த ஒரு பதிவில் தந்துவிட வேண்டுமென்று நான் எண்ணுவது பேராசை தான். இப்பதிவினை விளம்பரம் என்று நினைத்தாலும் சரி, வீண் பேச்சு என்று நினைத்தாலும் சரி, என் கண்களால் கண்டு, மனதால் உணர்ந்த காட்சிகளைப் பதிவு செய்வதில் தவறேதும் தெரியவில்லை.
தப்பித்தால் போதும் என்று தத்தளித்துக் கொண்டிருந்த என்னை, நண்பர் ஒருவர் மீட்டு பத்திரமான இடத்தில் கொண்டு சேர்த்த போது கூட தெரியவில்லை இந்த வெள்ளத்தின் ஆழம்! மனதை உலுக்கிய சில காட்சிகளும், ஜீரணிக்க முடியாத செவி வழிச் செய்திகளும், பாரபட்சம் பாராமல் தம்மால் முடிந்தவரை உதவிக்கொண்டிருந்த மக்களும், நீ என்ன செய்யப் போகிறாய் இந்த நகரத்திற்காக என்று கேட்பது போல் இருந்தது. பிரார்த்தனையைத் தவிர வேறேன்ன செய்ய முடியும் என்னால் என்று வருந்திக் கொண்டிருந்த வேளையில் தான், உதவிக் கேட்டு போடப்பட்டிருந்த ஃபேஸ்புக் பதிவுகள் கண்ணில் பட்டன. உதவி புரிபவரையும் உதவி கேட்போரையும் அப்படியே ஒருங்கிணைக்க ஆரம்பித்து, களத்தில் இறங்கிய நிமிடம் புரிய ஆரம்பித்தது வெள்ளத்தின் ஆழம் மட்டுமல்ல மனித மனங்களின் ஆழமும் கூட!
பெற்றோருடன் தொடர்பு கொள்ள முடியவில்லை; நண்பரின் நிலை தெரியவில்லை; உணவில்லை, உடுப்பில்லை என்று நூற்றுக்கும் மேற்பட்டோர் எனக்கு செய்தி அனுப்புகையில் எப்படியாவது இவர்களை கவலையிலிருந்து மீட்டு விட வேண்டும் என்பதைத் தவிர மனதில் வேறு சிந்தனை இல்லை.
நான் தங்கியிருந்த தோழியின் வீட்டில் என்னைப் பத்திரமாக பார்த்துக்கொண்டார்கள். நானும் எனது தோழியும் இணைந்து மீட்பு பணிகளையும் உதவிகளையும் செய்து கொண்டிருந்தோம். இரவில் கூட தூக்கம் என்பதை மறந்திருந்தோம். இருப்பினும், அன்பான மனிதர்கள் சூழ  இருக்க நல்ல இடம், சுத்தமான உணவு கிடைக்கப்பெற்ற நான், என்னை ஆசிர்வதிக்கப்பட்டவளாய் உணர்ந்தேன். அத்தியாவசியப் பொருட்கள் கூட ஆடம்பரப் பொருள் போன்ற மகிழ்ச்சியைக் கொடுத்தது அந்த நாட்களில் தான்.
தெரிந்தோர் தெரியாதோர் அறிந்தோர் அறியதோர் என நான் பேசிய அத்துணை மனிதர்களும் எனக்கு முக்கியமானவர்களாகத் தோன்றினர். ஆக்ஸிஜன் சிலிண்டர் முதல் சானிடரி நாப்கின் வரை, தேவையான இடங்களில் கொண்டு சேர்க்கும் வரை நாங்கள் எங்களின் தேவைகள் மறந்தோம். இந்தப் போராட்டத்தில், இந்த வெள்ளம் நம்மிடம் எண்ணிலடங்கா நல்ல உள்ளங்களையும் ஆயுளுக்குமான ஆசிர்வாதங்களையும் கொண்டு வந்து சேர்த்துள்ளது.
யாரென்றே அறியாத இந்த பெண்ணிற்கு செய்யப்பட்ட அலைபேசி ரீசார்ஜ்கள், பணப்பரிமாற்றம், வாகன உதவி, வாழ்த்துச் செய்திகள், அனைத்திற்கும் மேலான பிரார்த்தனைகள், அதுவும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் கூட, நான் வணங்கும் தெய்வம் என்னை நன்றாக வைக்க வேண்டும் என்று வேண்டிய  நல் உள்ளங்கள், என்னுடைய ஃபேஸ்புக் பதிவுகளை மட்டுமே  நம்பி உதவ முன்வந்தோர் என, இச்சமூகத்தின் மேல் நம்பிக்கை கொள்ள அனைத்து காரணிகளையும் அடித்துக் கொண்டுவந்து நம்மிடம் சேர்த்துவிட்டது இந்த வெள்ளம்.
கர்ம வினைகளைப் பற்றி தோழி ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கையில் இந்த வெள்ளமும் கர்மாவின் செயல் தானோ என்று சிந்திக்கத் தோன்றியது. சுற்றோரை நம்ப இயலாமல் இருந்த சூழ்நிலைகள், சகிப்புத்தன்மையற்ற நாடென்ற பழி, எதற்கும் உதவா இக்கால இளைஞர் கூட்டம், பணம் படுத்திய பாடு, தொழில்நுட்பம் செய்த ஆட்சி, நெறி தவறிய அரசியல், எல்லை மீறிய தலைவர்கள், பண்பு மறந்த மக்கள், இயற்கையை மறந்த கூட்டம், உடைந்து கொண்டிருந்த குடும்பக் கட்டமைப்பு என நழுவிக் கொண்டிருந்த வாழ்க்கையின் பிடிமானங்களை ஒரே மூச்சில் சீர் செய்ய வந்ததோ இந்த வெள்ளம்.
செய்த தவற்றிற்கு அளிக்கப்பட்ட தண்டனை போல் தெரியவில்லை. இழைக்கப் பெற்ற களங்கங்களைத் துடைக்க வந்த கருவியாகவே வந்தது இந்த வெள்ளம். பத்து வருடப் பகை மறந்து பேசிய நண்பர்கள், பக்கத்துக்கு வீட்டுக்காரன் காட்டிய பரிவு, பாதுகாப்புக்காகத் திரண்ட படை, காண்போரிடம் எல்லாம் கண்ட கருணை, களத்தில் இறங்கிய பெண்கள், அவர்களுக்கான பாதுகாப்பினை உறுதி செய்ய உதவிய ஆண்கள், திறக்கப்பட்ட கதவுகள், உடைக்கப்பட்ட தடுப்புகள், ஹிந்துவிற்குப் பிறந்த யூனுஸ், முசல்மானுக்குப்  பிறந்த கணேஷ், பகிர்ந்துண்ணப்பட்ட அன்னம், பகிர முடியாத உணர்வுகள், இன்னும் எத்தனை எத்தனை! ‘நல்லா இருக்கியா? எதும் வேணுன்னா தயங்காம கேளு’ என்ற வார்த்தைகளுக்குள் இருந்த ஆழம், வெள்ளத்தின் ஆழம் தந்த பய உணர்வைக் குறைத்து விட்டது!
இணையம் பழுதடைந்தாலும் மக்கள் இணைந்திருந்தனர். பணமிருந்த ஏடிம்கள் தகுதி இழந்திருந்தாலும், பண்பும் அன்பும் மிகுந்திருந்தது. இத்தனைக்கும் நடுவில் திருஷ்டி போல் சில செயல்கள் அரங்கேறிக்கொண்டு தான் இருந்தன. சூழ்நிலையை அரசியலாக்கி, அரசியலை அசிங்கமாக்கி, உதவிய பெண்களின் அலைபேசி எண்களைத் தவறாகப் பயன்படுத்தி, பொய்யான வதந்திகளைக் கிளப்பி, விவகாரத்தை விளையாட்டாக்கி விரக்தி அடையும்படி சிலர் நடந்துக்கொள்ளத்தான் செய்தனர். ஆனால், பிறரைக் காப்பாற்றத் தன் உயிரைவிட்ட இளைஞர்கள், பிறர் குடும்பத்திற்காக தன் குடும்பத்தினை மறந்திருந்த மக்கள், எங்கிருந்தோ வந்த ராணுவ வீரர்கள், தூங்காது உதவிக் கொண்டிருந்த வெளிநாட்டு/மாநில வாழ் மக்கள், கலங்காதீர்கள் பெண்களே நங்கள் இருக்கிறோம் என்று, ஏற்பட்ட இன்னல்களை சரி செய்ய வந்த என் சகோதரர்கள்! இவர்களுக்கு முன்னால் எந்த ஒரு இன்னலும் மின்னலாய் மறையுமன்றோ!
இயற்கையின் இந்த மிஷன் கொஞ்சம் காஸ்ட்லி தான் என்றாலும், பல ஆயிரம் கோடி ஒதுக்கியும் சுத்தம் செய்யமுடியாமல் இருந்த கூவத்தின் நிலை, இரண்டே வாரங்களில் தலைகீழாய் மாறிப்போயிருக்கிறது. இங்கு சுத்தம் செய்யப்பட்டது கூவம் மட்டுமல்ல! இந்நிலையில், இப்படியொரு மிஷனில் நம்மையும் ஒரு மெஷினாய் சேர்த்துக்கொண்ட இறைமைக்குதான் நன்றி கூற வேண்டும்.
எல்லைகளைத் தாண்டி மனிதம் பயணிக்கப்பட்டதற்கான சான்று, இந்த சென்னை மழை வெள்ளம்! பல நாடுகளிலிருந்து, பிற மாநிலங்களிலிருந்து, மற்ற ஊர்களிலிருந்து உதவிக்காக வந்து குவிகின்ற மக்களும், பொருட்களும், இந்த வானத்து நட்சத்திரங்களை விட அதிகம்! அனைவரும் சேர்ந்து சென்னையைத் தன் தோளில் போட்டுக்கொண்டு சீராட்டுகின்றனர்!
அனைவரிடமும் சொல்ல ஆயிரம் கதைகள் இருக்கின்றன. தன் தெருவில் உள்ளோர்க்கு உணவளிப்பது, தேவைப்பட்டோருக்கு பணம் உதவியும், இணைய உதவியும், இலவச வாகன உதவியும் அளிப்பது, என்று தன்னால் முடிந்த வரையில் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனை மக்களும் தயங்காமல் உதவிகளைப் பரிமாறிக் கொண்டனர். இருப்பவன் இல்லாதவன் என்ற பாரபட்சமெல்லாம் இங்கில்லை. இருந்தால் கொடுக்கிறேன், இல்லையென்றால் பிறருக்கும் சேர்த்து வாங்கிக் கொடுக்கிறேன் என்ற  மனிதம் மட்டும் தான் நிலைத்திருந்தது. அந்த களத்தில் அனைவருமே பெரிய மனிதர்கள் தான்! இதில் பெரிய உதவி சின்ன உதவி என்றெல்லாம் பிரித்துக் காண்பித்தால், அது தான் சிறுமை.
இழக்கக்கூடாத, அறிய செல்வங்களை எல்லாம் நாம் பெற்றுவிட்ட இந்நிலையில், இழந்த பொருட்களைச் சம்பாதித்துக்கொள்வது கடினமல்ல! இந்த மனநிலை மாறாமல் மனித நிலையினை மேம்படுத்த வேண்டும் என்பது மட்டும் தான் இப்பொழுது பலருடைய பிரார்த்தனையாக உள்ளது! ஒவ்வொரு வருடமும் பாரதியின் பிறந்த நாள் அன்று ‘இந்த சமூகத்த பாக்கறதுக்கு முன்னாடியே நல்ல வேளை அந்த மனுஷன் செத்து போனான்’ என்று தான் தோன்றும். இந்த முறையோ, ‘இன்னொமொரு நூற்றாண்டேனும் உயிரோட இருந்திருந்தா சந்தோஷப் பட்டிருப்பானே அந்த மனுஷன்’ என்று தான் தோன்றுகிறது!
நிதிமி குந்தவர் பொற்குவை தாரீர்;
நிதிகு றைந்தவர் காசுகள் தாரீர்;
அதுவு மற்றவர் வாய்ச்சொல் அருளீர்!
ஆண்மை யாளர் உழைப்பினை நல்கீர்!
மதுரத் தேமொழி மாதர்க ளெல்லாம்
வாணி பூசைக் குரியென பேசீர்!
எதுவும் நல்கியிங் கெவ்வகை யானும்
இப்பெருந் தொழில் நாட்டுவம் வாரீர்!

வாழ்வாதாரத்தை பிடிங்கிக்கொண்டது போல் தோன்றினாலும் வாழ்தலை சொல்லிக்கொடுத்துவிட்டது இந்த வெள்ளம். அடுத்து எப்பொழுது பேசுவோம்/ சந்திப்போம் என்று நிச்சயமில்லாத இச்சூழலில், ஆண் பெண் பேதமின்றி அனைவரும் நம் மனத்தையே கருப்பை எனக்கொள்வோம். அதில் அன்பை மட்டுமே விதைத்து, அதனையே அறுவடையும் செய்வோம், வாரீர்!
                                                                                                 -    வசு

Friday, 25 September 2015

உடை!

உடலை மறைப்பதற்காக உடுத்த ஆரம்பித்த காலத்திலிருந்து, இன்று வரை, உடுத்தல் எனும் வழக்கம் பல வழக்குகளை சந்தித்துக் கொண்டுதான் இருக்கின்றது.
பெண்களின் உடுத்தல் பற்றி விமர்சித்து சமீபத்தில் சர்ச்சையில் சிக்கிக்கொண்டுள்ள தமிழ் இதழைப் பற்றி அனைவரும் அறிவோம். இவ்வகையான சர்ச்சைகள் அனைத்தும் நமக்கு உரக்கக் கூறுவது நாகரீகத்தையோ கலாச்சாரத்தைப் பற்றியல்ல. மாறாக, சமூக கட்டமைப்பும், பெண்களை பொருளாகப் பார்க்கும் பெரும்பான்மையினரின் அறியாமயினைப் பற்றியே வெளிச்சமிட்டு காட்டுகின்றன.
உடுத்தலைப் பற்றி விவாதிப்பதற்கு முன்பு, உடையைப் பற்றியும் அதன் பின்னணிப் பற்றியும் தெரிந்து கொள்வது அவசியம். ஆதிகால மனிதன் தன் உடலை பிற விலங்குகள் மற்றும் பூச்சிகள் போன்றவற்றிடமிருந்து காத்துக் கொள்வதற்காகவும், இயற்கையின் கால மாற்றங்களை தாங்கிக்கொள்ளவும், இன்ன பிற அழிவிலிருந்து தற்காத்துக்கொள்வதற்காகவும் வடிவமைக்கப் பட்டதே ‘உடை’. அதுவே காலடைவில் நாகரீகமாக கருதப்பட்டு, வாழ்க்கைத் தரத்தின் அடையாளமாகவும் மாற்றப்பட்டு விட்டது.
இருக்கும் சூழலுக்கேற்ப, வசிக்கும் சுற்றுசூழலுக்கு ஏற்ப, மக்கள் ஆடைகளை வடிவமைத்துக் கொண்டார்களே தவிர ஆபாசம் என்ற அளவு கோலினை வைத்து ஆடைகள் வடிவமைக்கப்படவில்லை.
இன்னும் சொல்லப் போனால், ஒரு நாட்டிற்கென தனி உடை என்பதும் கிடையாது. காலத்திற்கேற்ப, வசதிக்கேற்ப உடைகள் மாறிக் கொண்டே தான் இருக்கின்றன.
இலை தழைகளை கொண்டு உடுத்திக் கொண்ட காலம் மாறி, தோலினை கொண்டு உடுத்தும் காலம் வந்தது, முக்கியப் பாகங்களை மட்டும் மறைத்துக் கொண்ட காலம் மாறி முழுக்க போர்த்திக் கொள்ளும் காலம் வந்தது, ரவிக்கை அணிய மறுத்த பெண்கள் மாறி முழு நீள ரவிக்கைகள் காட்சியளித்தன, சுற்றிக் கொள்ளும் புடவை மாறி பற்றிக்கொள்ளும் சுடிதார் இலகுவாய் இருந்து, காற்றில் பறக்கும் துப்பட்டாக்களை விட கட்சிதமாய் இருக்கும் சட்டை வசதியாய் இருக்கிறது.
இப்படி பெண்களுக்கு மட்டுமல்லாமல் ஆண்களுக்கும் உடை என்பது வசதிக்கேற்ப, காலத்திற்கேற்ப மாறிக்கொண்டே தான் இருக்கின்றது. இருப்பினும் பெரும்பாலும் விமர்சிக்கப் படுவது பெண்களின் உடைகள் தான் என்பதும் குறிப்பிடத் தக்கது.
உடை என்பது தனி மனித விருப்பம் தொடர்பான வழக்கமே தவிர ஒரு சமூகத்தின் குறியீடல்ல. கலாச்சாரங்களையும் வழக்கங்களையும் வசதிகளையும் ஒன்றோடொன்று குழப்பிக்கொண்டு அருவருப்பான விமர்சனங்களைத் தருவது, எந்த ஊடகத்திற்கும் அழகல்ல.
கண் கூசும் உடையென்று ஒருவர் கருதுவது பிறருக்கு சாதரணமாக தொனிக்கலாம். ஒருவர் அத்தியாவசியமாக கருதும் ஒரு வகை உடை, மற்றொருவருக்கு அனாவசியமாக தோன்றலாம்.
      உடைக் கட்டுப்பாடு அவசியமற்றது என்பதல்ல என் வாதம். அதனை விடவும் அவசியமானது மனக் கட்டுப்பாடு. காற்றில் களையும் முந்தானைகள், தழைந்து போகும் கொசுவங்கள், பறந்திடும் துப்பட்டாக்கள், வடிவம் காட்டும் காலுறைகள் என எல்லாவற்றிலும் ஆபாசத்தை மட்டும் காணும் மாக்கள், மடித்துக் கட்டும் வேட்டி, ஜாக்கி தெரியும் படி அணியப்படும் காற்சட்டை, முட்டி காட்டும் அரைக்கால்சட்டை, மார் காட்டும் உள்சட்டை என இவற்றைப் பற்றியும் விவாதிப்பதற்கு என்ன?
      ஒரு உடை ஆபாசமாக இருக்கின்றதோ இல்லையோ, அதனை யாரும் அறியாமல் படம் பிடித்து வெளியிடுவது என்பது கீழ்த்தரமான செயல். சமூகத்தை சரியான வழியில் கொண்டு சேர்க்க வேண்டிய ஊடகங்கள், இப்படி கண்டதை காட்சிப்படுத்தினால், நாம்வாழும் சமூகத்தின் மேல் இருக்கும் நம்பிக்கை காணாமல் போய்விடும். படக்கருவியும் பேனாவும் இருந்துவிட்டால் என்ன வேண்டுமானாலும் சாதித்து விடலாம் என்று நீங்கள் எண்ணியிருந்தால், மன்னிக்கவும்! ஊடகங்களுக்கான சுதந்திரத்தை நீங்களே மாய்த்துக்கொள்ளும் செயலில் ஈடுபட்டுள்ளீர்கள்!  
பெண்களை, காட்சிப் பொருளாகக் காண்பது தவறெனில், அவர்களைக் காட்சிப் பொருளாக சித்தரிப்பது என்பது அதை விடக் கொடிது. உடல் என்பது வெறும் சதைப் பிண்டம் தான் என்பதனை எடுத்துரைக்க வேண்டியவர்கள் எல்லாம், பெண்களை இழிவுப் படுத்த உடுத்தலை கையிலெடுப்பது கவலையளிக்கின்றது.
இவை அனைத்தையும் தாண்டி, பெண்களுக்கு, தான் இருக்கும் சமூகம் பற்றி அறிந்து கொள்ள இது ஒரு வாய்ப்பு. ஒரு இரவில் நிகழ்வதல்ல இந்த மாற்றம். காலம் கனியும் வரை காற்றினை எதிர்கொண்டு தான் ஆக வேண்டும்.  
அடிப்படையிலேயே திருத்திக் கொள்ளத் தவறி விட்ட சமூகமாய் இருப்பின், நாளைய அடுப்பங்கரைகள் அழுகுரல்களை மட்டும் தான் எதிரொலிக்கும்.
வாலியின் வரிகள் தான் நினைவிற்கு வருகின்றன. ‘அக்கடான்னு நாங்க உடை போட்டா, துக்கடான்னு நீங்க எடை போட்டா, தடா.. உனக்குத் தடா!’

-    வசு

Tuesday, 28 July 2015

பிழைத்திரு(க்)கலாம் !

சில்லிட்டுப் போவாய் என்று முன்பேயறிந்திருந்தால் உன்னை
ஷில்லாங்கிற்கே அனுப்பியிருக்க மாட்டோம்.

வாழத் தகுதியானது இப்பூமி என்றுரைத்து, நீயே
விலகியதில் என்ன நியாயம்?
முட்டாள்களும் மூர்க்கர்களும் முடிவில்லாமல் நிறைகையில்
முதல் குடிமகனாய், கனவின் முகமாய் இருந்த நீ  
முந்திக்கொண்டு ஏன் போனாய்?

கோள் பிடித்தாய் கோலும் பிடித்தாய், இன்று
உனக்கென கோவிலையும் பிடித்துவிட்டாய்!

உன் கனவு ஆண்டு வருமுன்னே நீ
கனத்துப் போவதுதான் முறையா?
நீ அனுப்பிய ஏவுகணைகளுக்கும் துணையிருக்க 
நீயே ஏவுகணையாய்ப் போனாயோ?

நீ மீட்டிய வீணை இன்று வீணாய்ப் போவதென்ன?
இளவட்டப் பார்வையினில் இன்று இருள் சூழ்ந்ததென்ன?
புவி வட்டப் பாதையிலே புகை மூண்டதென்ன?
இன்று புவி விட்டுப் பாதியிலே நீ போவதென்ன!

நீ நேசித்த குழந்தைகள் யாவும் இன்று
உம்மையே யாசித்துக் கொண்டிருக்கின்றன!
அகவை எண்பதைத் தாண்டினும் உனது அகவல்கள்
எல்லைகளைத் தாண்டி ஒலித்துக்கொண்டிருக்கின்றன.
.
புண்ணிய பூமியில் பிறந்த நீ, இறந்து,
புவியினில் சூனியம் சூழவிட்டாய்!

அழக்கூட அருகதையற்ற அரசியல்வாதிகளெல்லாம் உனக்கு
அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கின்றனர்.
என்ன பாவம் செய்தேனோ, உம்மைக் காணும்
முன்பே காட்சிப் பொருளாகிவிட்டாய்!

மறு ஜென்மம் ஒன்றிருப்பின் மறக்காமல் நீ பிறந்து
முறையாக நான் வந்து முறையிடவே மறையோது!

                                                                                                                 - வசு


Sunday, 19 July 2015

உலகம் அத்துணை அழகானது!


‘அவன் இப்படிச் செய்து விட்டான்’, ‘இவள் அப்படிச் செய்து விட்டாள்’, ‘அங்கு நிலைமை ரொம்ப மோசம்’, ‘இங்கு ஏன் இப்படி இருக்கின்றது’ போன்ற குறைகூவல்கள் நமது காதுகளை துளைப்பது இயல்பாகிவிட்டது. உண்மையில், இவ்வுலகை இந்த அளவிற்கு மோசமானதாக காட்சிப்படுத்த எந்தவித அவசியமும் இல்லை.

பொதுவாக, நம்முடைய மனநிலையானது, நாம் வாழும் சூழலையும், நம்மைச் சூழ்ந்துள்ள மக்களையும் பெரிதும் சார்ந்திருக்கும் பட்சத்தில், குறைகளை மட்டுமே பெரிதாக்கி நமது நிம்மதியினை நாமே கெடுத்துக் கொள்கிறோம். இவ்வுலகில் மேன்மக்கள் - கீழ்மக்கள் எனும் பாகுபாடு என்பது, மாறக்கூடிய நமது விருப்பு - வெறுப்பு சார்ந்தவையே தவிர நிலையானவை அல்ல. பின்லேடனை விரும்புவாரும் உள்ளனர், காந்தியை வெறுப்பவரும் உள்ளனர்.

ஆங்கிலத்தில் Utilitarian Theory (Maximum good for the maximum number) என்றழைக்கப்படும் பயனுடைமைச் சார்ந்த கொள்கை பொறுத்தே தேவை எது? அல்லது எது தேவையில்லை? என்பது தீர்மானிக்கப்படுகிறது. அம்முடிவுகள் யாவும் சூழல், காலம், விருப்பு, வெறுப்பு போன்ற பல காரணிகள் சார்ந்ததாகவே அமைகின்றன. நம்மை நாமே கட்டாயப்படுத்தியாவது நமக்கு வாய்த்தவைகளை விரும்பிட முயல்கையில், நம்மை அறியாமலேயே நாம் அமைதி கொள்கிறோம் என்பது தான் உண்மை.

பரெடோ விதியின் படி (Pareto’s Law) இவ்வுலகில் தீயவை என்பது 20% இருப்பின் மீதம் 80% நம்முடய மனதினைப் பொறுத்து தான் நல்லவை, தீயவை அமைகிறது. முடிவெடுக்கும் கோல் நம் கையில் இருக்கையில் முழி பிதுங்கிக் கொண்டிருக்கிறோம் பெரும்பாலான நேரங்களில். வானத்தில் பறப்பதும் பூமியில் இருப்பதும் அவரவர் எண்ணங்களே என்ற, பழைய பாடல் தான் நினைவிற்கு வருகின்றது.
வாழ்வதற்கான காரணிகளை நாம் இழந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு நொடியிலும், எங்கிருந்தோ மாயமாய் ஒரு காரணம் வந்து கண் முன் நிற்கும். குறைகளை மட்டுமே கூறி பயமுறுத்திக் கொண்டிருந்தோமெனில் நமது அடுத்த சந்ததியினர் தெருவில் நடக்கக் கூட விரும்ப மாட்டார்கள்.  

பெற்றோருடன் சண்டையிட்டு வரும் நேரங்களில் நண்பர்களின் தழுவலும், நண்பர்களிடம் சண்டையிட்டு வருகையில் பெற்றோரின் அணைப்பும், துணையிடம் கருத்து வேறுபாடு ஏற்படும் நேரத்தில் பார்க்கும் குழந்தையின் சிரிப்பும், சமூகமே நமக்கு எதிராய் இருக்கின்றது என்றெண்ணுகையில் கிடைக்கப்பெறும் ஆறுதல் வார்த்தைகளும், எதற்குமே நாம் லாயக்கில்லை என்று எண்ணிடும் தருணங்களில் கண் முன் வரும் அத்தனை  சாதனையாளர்களும், அவர்கள் கடந்து வந்த கடினப் பாதைகளும், நம் மனதை இதமாக்கும் இசையும் இயற்கையும், நாம் சிரிக்கக் காரணமாய் விளங்கும் சின்னச் சின்னக் காரணிகளும், இவ்வுலகை ஏற்றுக்கொள்ள வைத்து நம்மை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தி விடுகின்றன.

இங்குப் பிரச்சினை என்னவெனில் அந்த சின்னக் காரணிகளை நாம் கவனித்திட மறுப்பது தான். காசில்லாக் காலத்தில் பகிரப்படும் பண்டங்கள், நோய்வாய்ப் படும்போது நமக்காக நடத்தப்படும் பிரார்த்தனைகள், பிரிந்து செல்கையில் அரும்பிடும் கண்ணீர்த்துளிகள், கூட்ட நெரிசலையும் தாண்டி கேட்கும் இரயிலின் சத்தம், அடைமழையின் பின் அரும்பும் அழகிய காளான்கள், ஆய்ந்த பின் கையோடு தங்கும் புதினாவின் மணம், விருப்பில்லாப் பயணங்களிலும் கிடைக்கும் புது முகங்கள், துக்க வீட்டில் தூக்கிக்கொள்ளச் சொல்லும் குழந்தையின் கைகள், தோற்கும் தருணங்களில் கிடைத்திடும் தோள்கள், தனிமையில் கேட்டிடும் காற்றின் சத்தம், போக்குவரத்து நெரிசலுக்கிடையில் கடந்து செல்லும் குருவிகளின் கூச்சல் மிகுந்த சாலை, வேகத் தடைகளின் மேல் ஏறி இறங்கையில் உணர்ந்திடும் வயிற்றின் அலைகள் என எண்ணற்ற சிறிய விஷயங்கள் நமக்கு வாழ்வதற்கான காரணங்களையும் மகிழ்ச்சியானத் தருணங்களையும் அள்ளி வழங்கிக் கொண்டிருக்கின்றன.

கீதையில் சொல்வது போல் மான அவமானங்கள், ஏமாற்றங்கள், தோல்விகள், நிலைகுலைந்துப் போகச்செய்யும் காலச் சூழ்நிலைகள், நம்பிக்கைத் துரோகங்கள், இழப்புகள், வஞ்சகச் சூழ்ச்சிகள், எதிர்ப்புகள், நெருங்கியோரின் சூதுகள் என இவையனைத்துமே மானிட வாழ்வின் அன்றாட நிகழ்வுகள் தான். இவைகளையெல்லாம் மட்டும் பிடித்துக்கொண்டு பிதற்றிக்கொண்டிருப்பதும், மீண்டு வந்து வாழ்கையில் பிடிப்பைப் பெறுவதும் அவரவர் கைகளில் இருக்கும் கோலைப் பொருத்து!

குறையே இல்லை இந்த சமூகத்தில் என்றுக் கூறவில்லை. குறையினைச் சுட்டிக் காட்டவே கூடாதென்றும் கூறவில்லை. குறையினை மட்டுமே சுட்டிக் காட்டவேண்டாம் என்பது தான் என் எண்ணம். இங்கு ஞானிகளுக்கும் கடந்த காலம் உண்டு, பாவிகளுக்கும் எதிர் காலம் உண்டு.

வெறுப்பு விடுத்து, மகிழ்ச்சியான சூழலை ஏற்படுத்திக்கொள்வதற்கான எண்ணற்ற வாய்ப்புகளை இவ்வுலகு அளித்துக் கொண்டே தான் இருக்கும். அதனைப் பயன்படுத்திக் கொள்வதில் தான் நமது சூழல் அமைகிறது. அனைத்து கெட்டதிலும் நல்லதும் இருக்கிறது என்று மூத்தோர்கள் அடிக்கடி உரைப்பதை, நாமே உணரும் தருணங்கள், உணர்த்தும் பாடங்கள் பல. குறை என்றொன்று இருக்கும் வரை தான் நிறையென்பது யாதென்று நம்மால் அறிய இயலும். குறையினைக் குறைத்துக் கூறி நிறையினை நிரப்பி விட்டோமெனில், தானாக குறைபாடுகளும் குறைந்துவிடும்.

இங்கு அனைவருக்கும் இடமுண்டு. அனைவருக்கும் மக்களும் உண்டு. வெகு நாட்கள் நம் பயணத்தில் வராமல் பலர் போனாலும் அவர்கள் இருந்த நேரத்தில் நமக்காய் இருந்தத் தருணங்களும் அழகு தான்! நமக்கு அது தேவையும் பட்டது. இப்படி, ஒவ்வொரு நிலையிலும் நமக்கானவர்கள் இருந்துகொண்டேதான் உள்ளனர்.

அடுத்த நிமிடம் ஒளித்து வைத்திருக்கும் ஆச்சரியங்களை அனுபவிக்க தெரிந்துக்கொண்டோமெனில் ஒவ்வொரு நொடியும் நமக்கு அழகான தருணங்களை அள்ளித்தர காத்துக்கொண்டிருக்கின்றன. சும்மாவா கேட்டு வைத்தான் அந்த முண்டாசுக் கவிஞன், “காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்ப மென்றோ?” என்று.

அதிகம் ஆராயாமல் அனுபவித்தோமெனில், உலகம் அத்துணை அழகானது!
                                                                   - வசு. 

Sunday, 18 January 2015

மல்லுக்கட்டும் ஜல்லிக்கட்டு!

ஜல்லிக்கட்டு என்று பரவலாக அழைக்கப்படும் தமிழரின் வீர விளையாட்டான “ஏறு தழுவுதல்” (ஏறு என்பது காளையைக் குறிக்கும்), இன்று பல சர்ச்சைகளுக்கிடையில் சிக்கித் தவிக்கிறது. இந்தப் பாரம்பரிய விளையாட்டின் தடங்களை அறிந்து கொண்டால் மட்டுமே, தடைகளையும் அதன் காரணிகளான தளைகளையும் களைய முடியும் .

‘சல்லி’ என்றால் காசு. மாடுகளை அடக்குபவருக்கு பரிசாக, மாடுகளின் கொம்புகளில் காசைக் கட்டி விளையாடப்படுவதால் இதனை சல்லிக்கட்டு என்றழைக்கப்பட்டு அதுவே நாளடைவில் ஜல்லிக்கட்டு என்றாகிப்போனது.

காளையை அடக்குபவரின் மீது பெண்கள் காதல் கொள்வதும், அவரையே மணமுடிக்கும் வழக்கம் இருந்ததையும், கலித்தொகை முதலான சங்கத் தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டினை, வாடி மஞ்சுவிரட்டு, வேலி விரட்டு மற்றும் வடம் மஞ்சுவிரட்டு என மூன்று வகைகளாகப் பிரித்துள்ளனர். வாடி மஞ்சுவிரட்டினில், ஓடி வரும் காளையின் திமிலை தொற்றிக்கொண்டு அதிக தூரம் செல்பவரே வென்றவராவர். வேலி விரட்டைப் பொறுத்த வரையில், ஒரு விளையாட்டு மைதானத்தில் காளைகள் ஓட விடப்படும். இந்த காளைகளை அடக்க இளைஞர்கள் பலர் களத்தில் இறங்கி, தத்தம் வீரத்தைக் காட்டுவர். ஒரு நீளமான வடத்தில் கட்டப்பட்ட காளையை  பல இளைஞர்கள் சேர்ந்து அடக்குவது, வடம் மஞ்சுவிரட்டு. இந்த மூன்று வகைகளிலுமே கடைபிடிக்கப்படும் முக்கியமான விதி, காளைகளை காயப்படுத்தாமல் அடக்க வேண்டும்.

காளைகளைக் கொண்டு உழவு நடந்த நாட்களில், அவற்றை அடக்கி அதனோடு இயைந்து வாழ்வது அவசியமானதாக இருந்தது. தற்போது இயந்திரம் கொண்டு உழவு செய்தாலும், இயந்திரமயமான நம் வாழ்வை வளம் பெறச் செய்ய ஏறு தழுவுதல் அவசியமாகும்.

அதுமட்டுமல்லாமல், சீறி வரும் காளைகளை அடக்கும் ஆண்மகனின் வீரமும் தீரமும் திறமுடன் பறைசாற்றப்பட்டது. எதனையும் எதிர் கொள்ளும் துணிச்சலும், வறண்டு போகாத வீரமும் தமிழனின் பண்பெனப் பறைசாற்றிக் கர்வம் கொள்ளும் நாம், இவ்விளையாட்டினை அதற்கான உறை கல்லென உணர்தல் வேண்டும்.

மேற்கத்திய மாட்டுச்சண்டைக்கும் நமது ஜல்லிக்கட்டுக்கும் கொம்பளவும் தொடர்பில்லை. கொலைவெறியூட்டப்பட்ட எருதினைக் கொல்லும் கொடூரத்திற்கும், வீரம் செறிந்த திமில்களையுடையக் காளைகளை அடக்கும் தீரத்திற்குமான வெற்றிக்களிப்பு சமமாகுமா?

ஜல்லிக்கட்டு மாடுகளுக்கு சத்து மிகுந்த உணவுடன், தேவையான உடற்பயிற்சிகள் மட்டுமே அளிக்கப்படுகிறது. இயற்கையோடு இயைந்து வாழ, கால் நடைகளுடனும் நட்பு பாராட்டும் விதமாக அமைந்துள்ள இப்பெருமைமிகு பாரம்பரியம், மிருக வதை என வகைப்படுத்தப்படுவது நியாயம்தானா?

கோத்தகிரி மலையில் அமைந்துள்ள 3500 ஆண்டு பழமையான ஓவியம் ஒன்றில் ஆண்கள் ஏறு தழுவுவது போலான படங்கள் இருப்பதனை ஆராய்ச்சியாளர்கள் உறுதிப் படுத்தியுள்ளனர். மேட்டுபட்டியில் 1500 ஆண்டுகள் பழமையான ஓவியம் ஒன்றிலும் மாட்டினை அடக்குவது போன்ற காட்சிகள் காணப்படுவதாக தொல்பொருள் ஆய்வு தெரிவிக்கிறது.

இந்து சமவெளி நாகரீகத்திலும் காளைகளை அடக்கும் முறைகள் இருந்ததாக நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. இத்தகைய பழம்பெரும் வரலாறு கொண்ட ஏறு தழுவுதலுக்கு, 1113-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட மேற்கத்திய மாட்டுச்சண்டையே காரணமாக விளங்குகிறது எனும் வாதம், நகைப்புக்குரியது.

ஏறு தழுவுவதினால் மாடுகள் வதைக்கப்படுகின்றன, பத்து முதல் பன்னிரண்டு மனிதர்கள் வருடத்திற்கு பலி ஆகிறார்கள் என்று கவலையுறும் மனிதர்களெல்லாம், ஆண்டுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் விவசாயத்திற்கு தண்ணீர் இல்லாமல் தனக்கும் உணவில்லாமல் தற்கொலை செய்து கொள்ளும் அவலத்தை ஏன் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள்? ஜல்லிக்கட்டு மனித உயிரை பறிப்பதால் தடை செய்யப்படுகிறது என்று செய்தி வந்த வேளையில், நண்பன் ஒருவர் தனது பேஸ்புக் பக்கத்தில் ‘’மதுபானக் கடைகளில் மட்டும் சத்து டானிக்கா கொடுக்கப்படுகிறது?” என்று நகைச்சுவை கலந்து பதிவு செய்திருந்தார். தெருக்கள் தோரும் மதுபானக் கடைகளைத் திறந்து வைத்து மனிதனை கொஞ்சம் கொஞ்சமாக சாகடிக்கும் செயலை விடவா கொடியது ஜல்லிக்கட்டில் உயிரிழப்பது?

ஜல்லிக்கட்டில் உயிரிழப்பதை நியாயப்படுத்தவில்லை. இதை விடக் கொடியவை பல இருந்தும், ஏன் பாரம்பரிய விளையாட்டு ஒன்று பலரின் கண்களை உறுத்துகிறது என்ற ஆதங்கம் தான் தாளவில்லை. எந்த விளையாட்டில் தான் ஆபத்தில்லை? வாகன விபத்தில் பலர் உயிரிழக்கின்ற காரணத்திற்காக வாகனங்களையே தடை செய்ய முடியுமா? எம்மண்ணின் வீர விளையாட்டினை தடை செய்வதற்கு பதிலாக, பாதுகாப்பு முறைகளை மேம்படுத்தி சில கட்டுபாட்டுக்களை விதித்து, விளையாட்டினை நடத்த அனுமதி அளித்திருந்தால் காளைகள் சீற, இளைஞர்கள் பாய,  தைப் பொங்கல் திருநாளே களை கட்டி இருந்திருக்கும்.

மேற்கத்திய கலாச்சாரங்களை நமது கலாச்சாரமாக மாற்றிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், இந்த ஒன்றாவது எம் மண்ணினுடயதாக இருந்து விட்டுப் போகட்டுமே. கதைகள், நாடகங்கள், திரைப்படங்கள் என அனைத்திலுமே ஜல்லிக்கட்டினைக் கண்டு, கேட்டு, மகிழ்ந்து, மார்தட்டி கொண்ட எமது வீரமகன்களை காளைகளை அடக்க விடாமல் அடக்குவது எவ்விதத்தில் நியாயம்? 

ஏறு தழுவுதல் ஒரு விளையாட்டு என்பதனைத் தாண்டி, எம்மண்ணிலும், மனத்திலும் தலைமுறை தலைமுறையாக கடந்து வந்த பாரம்பரியம் என்பதனை எஞ்சியோர்க்கு எப்படி உணர்த்துவது? 

மல்லுகட்டுவதைத் தவிர இந்த ஜல்லிக்கட்டுக்கு வேறு வழி இல்லை!
                                                           - வசு


Thursday, 8 January 2015

அழகு மகளும் அற்புத அப்பாவும்.

அரவணைப்பை உருவகப்படுத்த வேண்டுமெனில், பெரும்பாலும் நாம் அனைவருமே நம் அப்பாவைத் தான் கூறுவோம். அதுவும் பெண் குழந்தைகள் என்றால், அப்பாவே அவர்களுக்கு உலகில் சிறந்த மனிதன். எவ்வளவு பெரிய ஆணாதிக்கவாதியாக இருப்பினும், ஒரு தகப்பனுக்கு தன் மகள் என்றுமே தன்னை ஆளும் ராணியாக இருத்தலில் தான் மகிழ்ச்சி. பெண்ணும், தான் மணக்கவிருக்கும் ஆண்மகன் தன் தந்தையை போலானவனாக இருக்க வேண்டும் என்பதையே எதிர்பார்த்திருப்பாள். சொல்லப்போனால் ஒரு பெண்ணினுடைய முதல் காதலும் அவளது தந்தை தான். ஒரு பெண் தைரியசாலியாக இருக்க வேண்டுமெனில், அவளின் தந்தைக்கு அதில் பெரும் பங்கிருக்கிறது.
பொட்டு வைத்து வளையல் மணி போட்டு அலங்கரித்து, கழுத்தைக் கட்டிக்கொண்டு உறங்கி, அம்மாவின் அதட்டல்களை மேல்முறையிட்டு, யானை சவாரி செய்து, கைப்பிடித்துப் பள்ளிக்குச் சென்று, மோட்டார்சைக்கிளில் முன் அமர்ந்து, மதிப்பெண் அட்டை காண்பிக்க பயந்து, புதுப் பொருள் கேட்டு அடம்பிடித்து, எதிர்த்துப் பேசி இப்படி எத்தனை தான் செய்தாலும் அத்தனையும் பொறுமையாய் ஏற்றுக்கொள்வதில் ஒரு தந்தைக்கு நிகர் தந்தையே.
தந்தையின் அதட்டல்களை எழுத்தாளர் பாலகுமாரன் அழகாகக் குறிப்பிடுவார். விக்கலை நிறுத்த பயமுறுத்தப் படுவது, விக்கலை நிறுத்தத் தானே தவிர உங்களை பயம் கொள்ள வைக்க வேண்டியில்லை. அப்படிப் பட்டது தான் அப்பாவின் அதட்டல்களும். மகளை அதட்டிவிட்டு மகளை விட அதிகமாக வருத்தப்படும் அப்பாக்கள் தான் இங்கு அதிகம். அம்மா எவ்வளவு திட்டினாலும் கண்டுக்கொள்ளதவர்கள், அப்பாவின் முறைப்பிற்கே கண்ணீர் தளும்பும் மகள்களும் இங்கு அதிகம்.
வயதுக்கு வந்த பின் மகளிடமிருந்து சிறிது விலகும் அப்பாக்கள், பொறுப்பு எனும் போர்வையைப் போத்திக் கொண்டு பிரிவு தரும் கவலைக்காய்ச்சலில் இருந்து தப்பிக்க நினைக்கிறார்கள். அந்நேரங்களில், அப்பாவினை தன் பிள்ளையாய் தத்தெடுக்கிறாள் ஒவ்வொரு பெண் மகளும்.
அப்பாவின் அலுவலுக்கு உதவி செய்ய மகள்களுக்கு என்றுமே பேரானந்தம். தான் அறியாதவைகளை தன் மகள் தனக்கு சொல்லிக்கொடுக்கும்போது, தன்னையே மறந்து பெருமையடைகிறார் ஒவ்வொரு தந்தையும். அதற்காகவே தெரிந்ததைக் கூடத் தெரியாதது போல் சில நேரங்களில் நன்றாக நடிக்கிறார்கள் இந்த தந்தைமார்கள். மகளின் பெருமையை பீத்திக் கொள்வதில் அனைவரையும் தோற்கடித்து விடுவார்கள் இந்த அப்பாக்கள்.
மகளுக்கு, பிற ஆணால் தொல்லை எனில் தீயில் காய்ந்த கரண்டி போல் கொதித்து விடுகின்றனர் அப்பாக்கள். தன் பாதுகாப்பிற்காகப் பாடுபடும் அப்பாக்களைப் பெற்ற பெண்களும், படரத் தூண் கிடைத்த கொடி போல் வாழ்வில் பற்றுடயவர்களாகவே படருகிறார்கள். ஆண் பிள்ளை இல்லையோ அய்யோ பாவம் என பிறர் கூறும்போது ‘மகனுக்கு மகனா மகளுக்கு மகளா என் அப்பன் ஆத்தாவா எம்மக இருக்கா, அது போதும்’ என்று சொல்லும் அப்பாக்களுக்கு எல்லாம் மகள் என்பவள் மகத்துவமானவள்.
ஆண் வர்கத்தின் மீதே கோபம் கொண்டவளாயினும் அவளுக்கு நம்பிக்கை அளிப்பது தந்தை தான். ஒரு பெண்ணுக்கு, ஒரு ஆசானாக, அன்பானவனாக, வழிகாட்டியாக, முன்மாதிரியாக, முதல் மனிதனாக, எதிர்பார்ப்பில்லாத அன்பினையும் ஆபாசமில்லாத காதலையும் ஒரு ஆணினால் கொடுக்க முடியும் எனில் அது அப்பாவாக மட்டுமே இருக்க முடியும்.
அப்பாவினையுடைய அத்துணை மகள்களுமே இளவரசிகள்தான், மகள்களைப் பெற்றெடுத்த அத்துணை அப்பாக்களும் அரசர்கள் தான். மகளை மணமுடித்து கொடுத்த பின்னும் அவளை ஒரு குழந்தையாகவே பாவிப்பதில் தந்தைக்கு நிகர் அவரே! பல நேரங்களில் அவளைத் தாயாக நினைப்பதும் இந்த அப்பாக்கள் தான். சிறந்த கணவனாக இருக்கத் தவறினாலும், சிறந்த தந்தையாக இருக்க மறப்பதில்லை, அழகான அப்பாக்கள்.
மிகக் கொடிய விஷயம் என்று ஒன்று ஒரு மகளுக்கு இருக்க முடியுமெனில், அது அவளது தந்தையின் கண்ணீராகத்தான் இருக்க முடியும். விஷத்தை விடக் கொடியது ஒரு தந்தையின் கண்ணீர். பொம்மையாய், உறுதுணையாய், தூணாய், துயர் நீக்கியாய், காதலாய், பிள்ளாய், ஆசானாய், ஆத்மார்த்தமாய், அவதாரங்கள் பல எடுத்த இந்த மனிதன் என்றுமே சிரித்துக்கொண்டே இருப்பது தான் ஒவ்வொரு மகளுக்கும் ஆனந்தம்.
என்னைப் பொறுத்த வரையில் அப்பா என்பவர் அலாவுதீன் பூதம் போலானவர். சிறிது பயமளித்தாலும் கேட்ட அனைத்தும் நிறைவேற்றும் அற்புத பூதம்! அன்பு கொண்டு அடிமைப் படுத்தப் பட்ட இந்த பூதம், தன் மகாராணி மகள் கட்டளையிடும் முன்னே நினைத்ததை நிறைவேற்றுவதையே மூச்சாகக் கொண்டுள்ளது. மகளாய் இருப்பதை விட வேறு பேறு இருப்பின், தன் தந்தையைப் பற்றி தன் மகளுக்கும் மகனுக்கும் கூறும் பொழுதுகளாகத் தான் இருக்கக் கூடும்!
                                                 அப்பாவின் மகள்,

                                                  வசு.