Thursday, 14 August 2014

இந்த மழை!

நான் : இறங்குவது இழிவென்பதை பொய்ப்பிக்கவே பெய்கிறதோ இந்த மழை?
மழை : வானம் கருத்து, மேகம் இடித்து கீழேத் தள்ளப்படும் நான், கீழிருந்து மேலே சென்றவள் தான். இறங்கியதற்காக இரக்கம் கொண்டால், நான் மண்ணை எப்படி அறிவது, விண்ணை எப்படி அளப்பது.

நான் : இறங்காமலேயே இருந்து விட்டால் காற்றோடு காற்றாக காணாமல் போய் விடும் என்பதற்காகவே இறங்குகிறதோ இந்த மழை?
மழை : மண்ணில் கலந்தால் மட்டுமே விண்ணில் பறக்க முடியும் என்பதனை நன்குணர்ந்த நான், இறங்குவதும் பல விதமான ஏற்றத்திற்காகத்தான், ஏறுவதும் இறங்குவதற்காகத்தான்.

நான் : இறங்கிய பின் இறுக்கத்தை தவிர்க்கவே, புழுக்கத்தை முன் அளிக்கிறதோ இந்த மழை?
மழை : புழுங்கினால் மட்டுமே வேகத்தினைக் கூட்டி, மேகத்தினைக் கரைத்து என் நோக்கத்தினை நிறைவேற்ற முடிகிறது. அப்புழுக்கத்தைப் போக்கவும், என்னால் மட்டுமே முடியும்!

நான் : அமைதியை அறிய புயலொன்று வேண்டுமென்பதால்தான் பேயென பெய்கிறதோ இந்த மழை ?
மழை : என்னைத் தடுக்க, மேகத்தினைக் கலைக்கும் காற்றுடன், போரிட்டால் மட்டுமே இப்பாரினில் கலக்க முடியும். மேகத்தின் ஆனந்தக் கண்ணீரை மெல்லமாய் துடைத்த காற்று, தென்றலாய் வாழ்கிறது, அத்துளிகளைத் தடுக்க நினைக்கும் ராக்ஷசக் காற்றே புயலென அழிகிறது.

நான் : இறங்கிய பின்னும் நம் நினைவில் இருக்கவே காணாமல் போகிறதோ இந்த மழை?
மழை : என் இறக்கத்தினைக் கூட கொண்டாடிய உங்களை குளிர்விக்கவே நான் காணாமல் போக வேண்டியிருக்கிறது. நீங்கள் குளிரில் காய்ந்து கொண்டிருக்கும் அவ்வேளையில் நான் மெல்ல மேலே ஏறிக் கொண்டிருப்பேன், மறுபடியும் இறங்குவதற்காக!


# இருப்பினை ரசிக்க மட்டுமல்ல, இயல்பாய் வசிக்கவும் வைக்கிறது இந்த மழை! #