துருதிஷ்டமான ஒரு சம்பவத்தைப் பற்றி ஆராய்வதோ, கருத்துத் தெரிவிப்பதோ தவறான
ஒரு செயல் என்பதால் சமீபத்தியக் கொலை பற்றிய எந்த எண்ணங்களையும் நான் முதலில்
பதிவிடவில்லை! ஆனால் அதற்குப் பிறகு நடக்கும் நாடகங்களையும், அன்றாட
நிகழ்வுகளையும் காண்கையில் மனதின் படபடப்புகளைப் பதிவிடாமல் இருக்க இயலவில்லை.
கொடூரமான முறையில் ஒரு பெண் இறந்து போயிருக்கிறாள், அவளை இழந்து அவளது
குடும்பம் பாடுபடுகிறது, சமூகமே அரண்டும் மிரண்டும் போயிருக்கிறது, இந்நிலையில்
அப்பெண்ணின் ஆடையைப் பற்றியும், நடத்தையினையயும், நண்பர் வட்டத்தைப் பற்றியும்,
ஆண் சமூகமா பெண் சமூகமா, மேல் ஜாதியா கீழ் ஜாதியா என்பது போன்ற அற்ப விவாதங்களை
முன் வைத்து அலங்கோல அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறீர்கள்.
ஒரு உயிரின் ஒழுங்கைப் பற்றி வாதிடும் நீங்களெல்லாம் ஒழுங்கு மிக்கவர்கள்
என்று நினைப்போ? பிரேதமாக இருப்பினும் பெண்ணாக இருந்தால் விமர்சிக்க வேண்டும் என்ற
கேவலமான எண்ணமோ?! பாதிக்கப்பட்டது பெண்ணாக இருப்பின், அவள் மீது என்ன தவறிருக்கிறது
என்று ஆராயும் அல்ப மானுட புத்தியோ? பெண்கள் பாதுகாப்பாக இருக்க பெண்களுக்கே
விதிமுறைகள் இடும் ஆணாதிக்க வர்க்கமோ?! அது சரி! காடுகளை அழித்த பாவத்திற்கு, மரம்
வளர்ந்தது தவறென்று அதன் மீதே பழி போடும் மாமனிதர்கள் தானே நாம்!
இதே மாதிரியான ஒரு ‘விபத்து’ (ஆம்! உங்களைப் போன்ற, கருணை இல்லாதவர்களால்
கட்டமைக்கப்பட்டச் சமூகத்தினால் நேர்ந்த விபத்து தான் இந்த சம்பவம்). தங்களுக்கு
நேராதவரையில் தான் இதுபோலான அறிவார்ந்த (நன்றி, வஞ்சப்புகழ்ச்சி அணி) வாதங்கள்
எல்லாம் அனுமதிக்கப்படும். இப்படியே நீடித்தால், நாளை உங்களுக்கும் இதே நிலை தான்
என்பதனை நினைவினில் நிறுத்துங்கள்!
அடிப்படைகளில் தவற்றை வைத்துக் கொண்டு அடுப்படிகளையும் அரசாங்கத்தையும் மட்டும்
குறை கூறுவதில் ஒரு பிரயோஜனமும் இல்லை! இன்றைக்கு சுவாதி; நாளைக்கு நாமாகவே கூட
இருக்கலாம். சாந்தி அடைய வேண்டிய ஆத்மாவினை களங்கப்படுத்துவதைக் கைவிடுங்கள்.
குற்றவாளிக்கான தண்டனையை நீதிமன்றம் முடிவெடுக்கட்டும். இச்சமூகம் உருவாகக்
காரணமாக இருந்த உங்களை மாற்றிக்கொள்ளும் முடிவினை நீங்கள் எப்பொழுது
எடுக்கப்போகிறீர்கள்? மனிதன் கட்டமைத்த இச்சமூகம், மனிதனைக் காப்பதற்காக எப்போது
வழிவகுக்கப் போகிறீர்கள்?!
நாம் ஏற்படுத்திய சமூகத்தின் வெளிப்பாடு தான் இதுவென்பதை உணருங்கள்! குற்றவாளிகளுக்கான
முக்கிய காரணம் அவன் சார்ந்திருக்கும் சமூகமே. எனக்கு குற்றவியல் பாடம் எடுத்த
ஆசிரியர் திரு. பிச்சைப்பிள்ளை அவர்கள் அடிக்கடி சிக்மன்ட் பிராய்டின் கோட்பாடுகளை
மேற்கோளிடுவார். குற்றங்களையும் தண்டனைகளையும் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கையில்,
‘இப்படிப்பட்ட ஒரு சமூகத்த உருவாக்க காரணமா இருந்த உங்கள தானே முதலில் தண்டிக்கணும்?’
என அவர் கேட்ட கேள்வி இன்னும் நினைவிருக்கிறது. மனிதர்களால் கட்டமைக்கப்படும்
சமூகமே மனிதனால் ஏற்படும் அத்துணை குற்றங்களுக்கும் காரணம் என்பது அவரது முடிவு. அந்த
வார்த்தைகளின் ஆழம் இப்பொழுது இன்னும் நன்கு விளங்குகிறது.
கர்ப்பிணிப்பெண் சிரமப்பட்டாலும் பேருந்தில் இடமளிக்க மாட்டோம், வயோதிகர் நொந்துபோனாலும்
கண்டும் காணாமல் காதுகளில் ஒலிப்பான்களை அடைத்துக்கொள்வோம், ஒருவர் செய்த தவற்றிற்கு
அவரது அன்னையை ஆபாசப்படுத்துவோம், தவறெனத் தெரிந்தும் தவறாமல் பலவற்றை (பட்டியலுக்கு
இப்பதிவு போதாது) தினந்தோறும் செய்வோம். இருப்பினும், தவறொன்று நேர்கையில், தடியை
நம் கைகளில் ஏந்தி நடுவர்களாகி விடுவோம்!
கொலையாளி... ஐயோ சாரி.... குற்றவாளி, (இதுக்கும் சண்டைக்கு வருவாங்களோ!)
தண்டிக்கப்பட வேண்டியவன் தான். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால்
குற்றங்களை எப்படி குறைக்கப் போகிறோம்? தண்டனையளியுங்கள் குற்றவாளிக்கு,
சீர்திருத்துங்கள் (மதத்தளவில் அல்ல, மனதளவில்) தங்களையும் தத்தமது சமூகத்தையும்.
(இதையும் சாதி பஞ்சாயத்து ஆக்கிடுவாங்களோ!)
முன்பெல்லாம் கர்ப்பிணிகளுக்கு இலவச ஆட்டோக்கள் ஓடின. இன்று? காசு இருந்தாலும்
ஆட்டோவில் செல்ல பயம் நிலவும் நிலை. எந்தப் பெண்ணிடம் வேண்டுமானாலும் கேட்டுப்
பாருங்கள், வாழ்க்கையில் ஒரு முறையேனும் அவளுக்கு பாலியல் ரீதியான இன்னல்
நேர்ந்திருக்கும். பேருந்தில் பயணிக்கையில், பள்ளிக்கூடத்தில், கல்லூரியில், நண்பன்
பெயரில் வந்த அரக்கர்கள், காதலின் பெயரில் நடந்த கொடுமைகள், குடும்ப உறவினர்கள்,
இதெல்லாம் போதாதென்று இக்காலத்தில் சந்திக்கும் வலைத்தள தொந்தரவுகள். நம்
வாழ்க்கையில் சந்திக்கும் பெரும்பாலான ஆண்களும் ஏதோ ஒரு வகையில் ஏதோ ஒரு
பெண்ணிற்கு இன்னல்களை அளித்திருக்கிறார்கள் என்பது வெட்கப்படவேண்டிய உண்மை.
சமீபத்தில் வெளியான இறைவி திரைப்படத்தினைப் பார்த்து அங்கலாய்த்த
நாக்குகளெல்லாம் இன்று என்ன செய்து கொண்டிருக்கின்றன என்று தெரியவில்லை. தனக்குப்
பிடித்த பெண்ணிற்கு தன்னைப் பிடிக்கிறதோ இல்லையோ, தனக்கு மட்டும் தான் அவள்
சொந்தம்! ‘என் பொண்டாட்டி எனக்கு மட்டும் தான்’ என்று நினைக்கும் ஆண்களுக்கு ‘என்
புருஷன் எனக்கு மட்டும் தான்' என்று எண்ணும் பெண்களைப் பிடிப்பதில்லை. பெண்கள்
செய்தால் விபச்சாரம், ஆண்கள் செய்தால் கலாச்சாரம்! (என்னங்கடா உங்க லாஜிக்கு?!)
பெண், ஒரு ஆணுக்கு எல்லா விதத்திலும் தேவை என்பது உண்மை தான் போலும்! ஒருவரைச் சாடுவதற்குக்
கூட நமது உத்தமபுருஷர்களுக்கு பெண்ணும் அவளது உறுப்புகளும் தேவைப்படுகின்றனவே! ('நடத்த
கெட்டவ எப்டி பேசறா பாரு’ ன்னு சொல்வாங்களோ?) இந்த விஷயத்தில், ‘பெரும்பான்மையான /
சிறுபான்மையான’ ஆண்கள் என்று நான் குறிப்பிட அவசியமில்லாது போனது எவ்வளவு பெரிய
அசிங்கம்!
இப்படி, சின்னச்சின்ன செயல்பாடுகள் தான் ஒட்டு மொத்த வடிவெடுத்து இன்று
கொலையில் வந்து முடிகிறது. பணத்தைச் சம்பாதிக்கக் கற்றுத் தரும் தற்கால
கல்வித்திட்டம், சகமனிதனை எப்படி மதிக்க வேண்டும் என்பதனை சொல்லித்தர மறந்து
விட்டது. மாரல் சைன்ஸ் வகுப்புகளெல்லாம் இன்று பேச்சுக்குக் கூட நடப்பதில்லை. ‘மை கிட்ஸ்
ஆர் ஸ்டடியிங் இன் அப்ராட்’ எனச் சொல்ல விரும்பும் பெற்றோர்கள் ஒரு நல்ல மனிதனை
உருவாக்கும் தலையாயக் கடமையை மறந்து விட்டார்கள்.
புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்ட கதையாய், மேற்கத்திய பெண்ணியத்தை
நம் நாட்டில் திணித்துக் கொண்டு பெண்களும் திணறிக்கொண்டிருக்கிறோம். பார்வையை
திருத்தும் கருவியாக செயல்படுவதை விட்டு விட்டு, ஆடைச்சுதந்திரத்திற்காகவும், அற்ப
போதைக்காகவும் அல்லவா பாடுபடுகிறோம்? (இப்போ பொண்ணுங்களும் என்ன திட்டுவாங்களோ?!)
ஊடக விசாரணையால் (Media Trial), கேடான விளைவுகளை
மட்டும் தான் அளிக்க முடியும் என்பதற்கு இது ஒரு சான்று! ‘அடிடா அவள உதடா அவள வெட்றா
அவள’, ‘அவ ஷேப்பு அப்பபாப்பாப்பா’ போன்ற பாடல்களுக்கு விசிலடித்து விட்டு, இன்று ஃபேஸ்புக்கில்
திரைப்படங்களை மட்டும் சாடிக்கொண்டிருகின்றனர். சில நல்ல படைப்புகளுக்கே கொடிப்
பிடித்து மறுப்பு தெரிவித்த நீங்கள், இம்மாதிரியான படைப்புகளையும் தடுக்கலாமே? எல்லாம்
ஒரு சில மாதம் கூவிவிட்டு, மறுபடியும் பருப்பு வடை செய்முறை கதை தான்!
இவ்வளவையும் தாண்டி ஒரு பெண் வெளியில் வந்தால், அதனையும் துச்சப்படுத்துவது இயல்பாகிவிட்டது!
நல்லவளோ கெட்டவளோ, அனைத்து விதமான பெண்களுக்கும் இங்கு துச்சமாக ஒரு பெயருண்டு! (பட்டியலிட
தேவையில்லை!)
பெண் எனப்படுபவள் போற்றுதலுக்குரியவள், பெண் எனப்படுபவள் கடவுளின் பரிசு, பெண்
எனப்படுபவள் புனிதமானவள், பெண் எனப்படுபவள் குடும்பத்தின் குத்து விளக்கு – ‘இப்படி
எந்த ஈர வெங்காயமும் எங்களுக்கு வேணாம்!’. பெண்ணை சகமனிதியாக, தோழியாக மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்!
அது போதும்.
- வசு.