பொதுவாக ஜுரம் தலைவலி என்றால் உடலுக்கு
குளிரூட்டும் பண்டம் எதையும் எடுத்துக்கொள்ளத் தோன்றாது. இம்முறை ஜுரம் வந்தபோதோ,
குளிர்ந்த/ குளிரூட்டும் பதார்த்தங்களையே உடலும் மனமும் விரும்பிக்கொண்டிருந்தன. ‘வெந்நீரை மட்டும் குடி’ என்ற அம்மாவின் அதட்டல்களையும் மீறி குளிர்ந்த பானங்களையே
தேர்ந்தெடுக்கும் அளவுக்கு சூடான உணவின் மீது எரிச்சல். என்னடா இதுவென்று
வியந்து கொண்டிருந்த நிலையில் தான் அம்மை போட்டிருக்கிறது என்பதனை மருத்துவர்
கண்டறிந்தார். சூடாக எதையும் உட்கொள்ளக் கூடாது என்பதனை மருத்துவர் கூறும் முன்பே
எனது உடல் எனக்கு உணர்த்தியதை எண்ணி ஆச்சர்யமாக இருந்தது!
அம்மையின் தாக்கத்தை விட, உடல் அளித்த
வியப்பு தான் எனக்கு மிகுதி. உடலை நன்கு கவனித்தபோது தான் புரிந்தது, தனக்கான
தேவைகளை, தான் சரியாக செயல்படுவதற்கு வேண்டிய காரணிகளை தாமே அறிந்து நமக்கு
குறிப்பளிக்கிறது மனித உடல். குறிப்பினை அறிய விடாமல் தடுப்பது நமக்கு எல்லாம்
தெரியும் என்ற அதிமேதாவித்தனம் தான்.
இவ்வுலகத்தில் தாமாகவே இயங்கும்
சிறந்த இயந்திரம், மனித உடல்! கருவில் உள்ள குழந்தையின் நரம்பு மற்றும் தசை வளர்ச்சிக்கு
தேவையான தாதுக்களும், கர்ப்பிணிகளின் மலச்சிக்கலை தீர்க்க கூடிய வைட்டமின்களும்
நிறைந்தது மாங்காய். இதனை நன்கறிந்த மனித உடல், கர்ப்பிணிகளை மாங்காய்க்கு ஏங்க
வைத்து விடுகிறது.
மாதவிடாய் காலத்தில் சில ஹார்மோன்களின்
காரணமாக மன அழுத்தம் மிகுந்து இருக்கும். அந்த ஹார்மோன்களை அமைதிப்படுத்தி
மூளையினை சாந்தமாக வைக்கும் தன்மை கொண்டது சாக்லேட் மற்றும் இனிப்பு பண்டங்கள்.
மாதவிடாய் நாட்களில் மாதர்களை சாக்லேட் பக்கம் தள்ளுவதும் உடலின் தேவை தான்.
இரத்தசோகை உள்ளவர்கள் அரிசியினை அதிகம்
விரும்புவதற்கும் உடலின் தன்மை தான் காரணம். உடலின் இரும்பு சக்தியை அதிகரிக்க
செய்யும் வல்லமை அரிசியில் உள்ளது. அதுமட்டுமல்லாது, இரத்தசோகையினால் உண்டாகும்
சோர்வினைச் சீர் செய்ய, அரிசியில் உள்ள கார்போஹைட்ரேட் பெரிதும் உதவுகிறது.
இதுபோன்ற எத்தனையோ தருணங்களில்
தமக்குத் தேவையானதை தாமே நிறைவேற்றிக்கொள்கிறது மனித உடல். தேவை இல்லாதவற்றை உடலில்
செலுத்தும்போது அதனை வெளியேற்றவும் உடலுக்கு நன்கு தெரியும். ஒத்துக்கொள்ளாத
உணவினை உண்கையில் வயிறு கெடுவதும், வாந்தி அல்லது பேதி ஆன பின்பு தாமாகவே உடல்
சீராவதும் நாம் பல முறை உணர்ந்திருப்போம்.
உணவின் அளவைக் கட்டுப்பாட்டில் வைப்பதிலும்
நமது உடல் கில்லாடி. சில சமயங்களில் ரெண்டு இட்லிகளுக்கு மேல் சாப்பிட இயலாது.
சில சமயங்களில் பத்து இட்லிகளுக்கு மேல் உண்டாலும் போதாது போல் தோன்றும்.
இவையெல்லாம் சின்னச் சின்ன சமாச்சாரங்கள் என்று நாம் எண்ணினாலும், உடலுக்கான
தேவையினை தாமே கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்கிறது என்பது ஆச்சர்யமளிக்கும்
சங்கதியே!
வளர்ந்து வரும் டயட்டிங் கலாச்சாரம்
நமது உடலுக்கு எதிர்மறை விளைவுகளை அளித்துக்கொண்டிருக்கிறது என்பது தான் உண்மை.
டயட்டிங் என்ற பெயரில், உடல் நமக்கு அளிக்கும் குறிப்புகளை உதாசீனப்படுத்தி, பட்டினி
கிடந்து நம் உடலுக்குத் தேவையான மூலப்பொருட்களை கிடைக்க விடாமல் தடுப்பதனால், உடலின்
இயங்கும் தன்மை பாதிக்கப் படுகிறது.
இதற்கு பதில், பத்தியமாக
உணவெடுத்துக் கொண்டோமெனில் உடல் தனக்குத் தேவையானவற்றை நமக்கு குறிப்பளித்து விடும்.
எவ்வளவு சிறந்த இயந்திரமாயினும் அவ்வப்போது எண்ணெயிட்டு தானே ஆக வேண்டும்!
உடலின் குறிப்புகளை நாம் அறியத் தவறி
ஆங்கில மருந்தினை எடுத்துக்கொள்கையில் அம்மருந்தே உடலின் மொழியை அழித்துவிடுகிறது.
வாந்தி எடுத்தால் தான் வயிறு சரியாகும் என்கிற சில நிலைகளில், ஆங்கில மருந்து
மூலம் வாந்தியைக் கட்டுப்படுத்த முயற்சிக்கும்போது நமது உடல் பழுதடைகிறது.
பெரிய நோய்கள் பலவற்றைச் சீர் செய்ய
ஆங்கில மருந்து உதவுகிறது என்றாலும், தொட்டதற்கெல்லாம் மாத்திரைகளை விழுங்க நினைத்தால்,
நமது அதிசய இயந்திரத்திற்கு வேலையே இல்லாமல் போய், துருப்பிடித்து விடும்.
நம் உடலில் ஏற்படும் எந்த ஒரு
நோயும் இயற்கையாக வருவது அல்ல என்று ஒரு ஆய்வு கூறுகிறது. எந்த ஒரு நோயினையும்
எதிர்கொள்ளும் தன்மை நம் உடலுக்கு உள்ளது என்பதனையும் அதே ஆய்வு கூறுகிறது. இதனை
முன்பே கணித்த நமது சித்தர்கள் தங்களது மருத்துவக் குறிப்புகளில் ‘தன்வினை புறவினை
தாழினும் மிகினும் உடலைப் பிணிக்கும் உண்மையிது தாமே’ என்று கூறியுள்ளனர்.
உடலின் செயல்பாட்டினை பற்றி பேச
பெரிய நோய்களை அறிய வேண்டிய அவசியமில்லை. நமது அனைத்து உறுப்புகளையும் அன்றாடம் கண்காணித்து,
தேவையான ரசாயனங்களை தேவையான பகுதிக்கு பாய்ச்சி, தேவையில்லாதவற்றை அகற்றி சுத்தம்
செய்து, அசுத்தத்தை வெளியேற்றி, பழுதடையாமல் இருக்க தாமே தம்மை கவனித்துக்கொள்ளும்
நம் உடல், ஒரு உலகையே உள்ளடக்கி வைத்துள்ளது.
மனித உடல் மட்டுமல்லாது மற்ற
விலங்குகளுக்கும் இந்த தன்மை உள்ளதாய் ஆய்வுகள் கூறுகின்றன. செரிமான பிரச்சனை இருந்தால்
தானாகவே புல் உண்ணுமாம் நாய். வயிற்றுப்பிரச்சனை இருந்தால் மண்ணைத் தின்னுமாம் கிளி. சுலபமாகப் பிரசவிக்கப் புதர்களில் உள்ள தண்டுகளையும் இலைகளையும்
எடுத்துக்கொள்ளுமாம் யானை. எப்பொழுது என்ன உண்ண வேண்டுமென்று மனிதர்களை விட பிற
விலங்குகளுக்கு நன்கு தெரியுமாம்! அது சரி! இயற்கையை உதாசீனப்படுத்த மனிதர்களைப்
போல் மற்ற விலங்கினங்களுக்கு ஆறாவது அறிவு இல்லையே!
இந்த இயந்திரத்திற்கு மருந்து
வேண்டுமானால் நாம் கண்டுபிடித்திருக்கலாம். ஆனால் அதன் இயக்கமும் செயல்பாட்டு
யுக்தியும் இப்பிரபஞ்சத்தின் ரகசியங்களில் ஒன்றே! நம்மை மீறிய, நமக்கு மேலான சக்தி
ஒன்று இவ்வுலகில் உள்ளதென்பதற்கு நம் உடலே சிறந்த சாட்சி!
தலைசிறந்த கட்டுமானமான மனித உடல்,
உலக அதிசயங்களில் ஒன்றே! நாம் எவ்வளவு உதாசீனப்படுத்தினாலும் நம் உடல் நமக்கு
குறிப்பளித்துக்கொண்டே தான் இருக்கும்! குறிப்பினை புரிந்து, மகத்துவம் அறிந்து, இயற்கையோடு
இயைந்து, நலமுடன் வாழ்வோம்!
- வசு