Saturday, 9 July 2016

ஈர வெங்காயம்.

துருதிஷ்டமான ஒரு சம்பவத்தைப் பற்றி ஆராய்வதோ, கருத்துத் தெரிவிப்பதோ தவறான ஒரு செயல் என்பதால் சமீபத்தியக் கொலை பற்றிய எந்த எண்ணங்களையும் நான் முதலில் பதிவிடவில்லை! ஆனால் அதற்குப் பிறகு நடக்கும் நாடகங்களையும், அன்றாட நிகழ்வுகளையும் காண்கையில் மனதின் படபடப்புகளைப் பதிவிடாமல் இருக்க இயலவில்லை.

கொடூரமான முறையில் ஒரு பெண் இறந்து போயிருக்கிறாள், அவளை இழந்து அவளது குடும்பம் பாடுபடுகிறது, சமூகமே அரண்டும் மிரண்டும் போயிருக்கிறது, இந்நிலையில் அப்பெண்ணின் ஆடையைப் பற்றியும், நடத்தையினையயும், நண்பர் வட்டத்தைப் பற்றியும், ஆண் சமூகமா பெண் சமூகமா, மேல் ஜாதியா கீழ் ஜாதியா என்பது போன்ற அற்ப விவாதங்களை முன் வைத்து அலங்கோல அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறீர்கள்.

ஒரு உயிரின் ஒழுங்கைப் பற்றி வாதிடும் நீங்களெல்லாம் ஒழுங்கு மிக்கவர்கள் என்று நினைப்போ? பிரேதமாக இருப்பினும் பெண்ணாக இருந்தால் விமர்சிக்க வேண்டும் என்ற கேவலமான எண்ணமோ?! பாதிக்கப்பட்டது பெண்ணாக இருப்பின், அவள் மீது என்ன தவறிருக்கிறது என்று ஆராயும் அல்ப மானுட புத்தியோ? பெண்கள் பாதுகாப்பாக இருக்க பெண்களுக்கே விதிமுறைகள் இடும் ஆணாதிக்க வர்க்கமோ?! அது சரி! காடுகளை அழித்த பாவத்திற்கு, மரம் வளர்ந்தது தவறென்று அதன் மீதே பழி போடும் மாமனிதர்கள் தானே நாம்!

இதே மாதிரியான ஒரு ‘விபத்து’ (ஆம்! உங்களைப் போன்ற, கருணை இல்லாதவர்களால் கட்டமைக்கப்பட்டச் சமூகத்தினால் நேர்ந்த விபத்து தான் இந்த சம்பவம்). தங்களுக்கு நேராதவரையில் தான் இதுபோலான அறிவார்ந்த (நன்றி, வஞ்சப்புகழ்ச்சி அணி) வாதங்கள் எல்லாம் அனுமதிக்கப்படும். இப்படியே நீடித்தால், நாளை உங்களுக்கும் இதே நிலை தான் என்பதனை நினைவினில் நிறுத்துங்கள்!

அடிப்படைகளில் தவற்றை வைத்துக் கொண்டு அடுப்படிகளையும் அரசாங்கத்தையும் மட்டும் குறை கூறுவதில் ஒரு பிரயோஜனமும் இல்லை! இன்றைக்கு சுவாதி; நாளைக்கு நாமாகவே கூட இருக்கலாம். சாந்தி அடைய வேண்டிய ஆத்மாவினை களங்கப்படுத்துவதைக் கைவிடுங்கள்.

குற்றவாளிக்கான தண்டனையை நீதிமன்றம் முடிவெடுக்கட்டும். இச்சமூகம் உருவாகக் காரணமாக இருந்த உங்களை மாற்றிக்கொள்ளும் முடிவினை நீங்கள் எப்பொழுது எடுக்கப்போகிறீர்கள்? மனிதன் கட்டமைத்த இச்சமூகம், மனிதனைக் காப்பதற்காக எப்போது வழிவகுக்கப் போகிறீர்கள்?!

நாம் ஏற்படுத்திய சமூகத்தின் வெளிப்பாடு தான் இதுவென்பதை உணருங்கள்! குற்றவாளிகளுக்கான முக்கிய காரணம் அவன் சார்ந்திருக்கும் சமூகமே. எனக்கு குற்றவியல் பாடம் எடுத்த ஆசிரியர் திரு. பிச்சைப்பிள்ளை அவர்கள் அடிக்கடி சிக்மன்ட் பிராய்டின் கோட்பாடுகளை மேற்கோளிடுவார். குற்றங்களையும் தண்டனைகளையும் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கையில், ‘இப்படிப்பட்ட ஒரு சமூகத்த உருவாக்க காரணமா இருந்த உங்கள தானே முதலில் தண்டிக்கணும்?’ என அவர் கேட்ட கேள்வி இன்னும் நினைவிருக்கிறது. மனிதர்களால் கட்டமைக்கப்படும் சமூகமே மனிதனால் ஏற்படும் அத்துணை குற்றங்களுக்கும் காரணம் என்பது அவரது முடிவு. அந்த வார்த்தைகளின் ஆழம் இப்பொழுது இன்னும் நன்கு விளங்குகிறது.

கர்ப்பிணிப்பெண் சிரமப்பட்டாலும் பேருந்தில் இடமளிக்க மாட்டோம், வயோதிகர் நொந்துபோனாலும் கண்டும் காணாமல் காதுகளில் ஒலிப்பான்களை அடைத்துக்கொள்வோம், ஒருவர் செய்த தவற்றிற்கு அவரது அன்னையை ஆபாசப்படுத்துவோம், தவறெனத் தெரிந்தும் தவறாமல் பலவற்றை (பட்டியலுக்கு இப்பதிவு போதாது) தினந்தோறும் செய்வோம். இருப்பினும், தவறொன்று நேர்கையில், தடியை நம் கைகளில் ஏந்தி நடுவர்களாகி விடுவோம்!

கொலையாளி... ஐயோ சாரி.... குற்றவாளி, (இதுக்கும் சண்டைக்கு வருவாங்களோ!) தண்டிக்கப்பட வேண்டியவன் தான். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் குற்றங்களை எப்படி குறைக்கப் போகிறோம்? தண்டனையளியுங்கள் குற்றவாளிக்கு, சீர்திருத்துங்கள் (மதத்தளவில் அல்ல, மனதளவில்) தங்களையும் தத்தமது சமூகத்தையும். (இதையும் சாதி பஞ்சாயத்து ஆக்கிடுவாங்களோ!)

முன்பெல்லாம் கர்ப்பிணிகளுக்கு இலவச ஆட்டோக்கள் ஓடின. இன்று? காசு இருந்தாலும் ஆட்டோவில் செல்ல பயம் நிலவும் நிலை. எந்தப் பெண்ணிடம் வேண்டுமானாலும் கேட்டுப் பாருங்கள், வாழ்க்கையில் ஒரு முறையேனும் அவளுக்கு பாலியல் ரீதியான இன்னல் நேர்ந்திருக்கும். பேருந்தில் பயணிக்கையில், பள்ளிக்கூடத்தில், கல்லூரியில், நண்பன் பெயரில் வந்த அரக்கர்கள், காதலின் பெயரில் நடந்த கொடுமைகள், குடும்ப உறவினர்கள், இதெல்லாம் போதாதென்று இக்காலத்தில் சந்திக்கும் வலைத்தள தொந்தரவுகள். நம் வாழ்க்கையில் சந்திக்கும் பெரும்பாலான ஆண்களும் ஏதோ ஒரு வகையில் ஏதோ ஒரு பெண்ணிற்கு இன்னல்களை அளித்திருக்கிறார்கள் என்பது வெட்கப்படவேண்டிய உண்மை.

சமீபத்தில் வெளியான இறைவி திரைப்படத்தினைப் பார்த்து அங்கலாய்த்த நாக்குகளெல்லாம் இன்று என்ன செய்து கொண்டிருக்கின்றன என்று தெரியவில்லை. தனக்குப் பிடித்த பெண்ணிற்கு தன்னைப் பிடிக்கிறதோ இல்லையோ, தனக்கு மட்டும் தான் அவள் சொந்தம்! ‘என் பொண்டாட்டி எனக்கு மட்டும் தான்’ என்று நினைக்கும் ஆண்களுக்கு ‘என் புருஷன் எனக்கு மட்டும் தான்' என்று எண்ணும் பெண்களைப் பிடிப்பதில்லை. பெண்கள் செய்தால் விபச்சாரம், ஆண்கள் செய்தால் கலாச்சாரம்! (என்னங்கடா உங்க லாஜிக்கு?!)

பெண், ஒரு ஆணுக்கு எல்லா விதத்திலும் தேவை என்பது உண்மை தான் போலும்! ஒருவரைச் சாடுவதற்குக் கூட நமது உத்தமபுருஷர்களுக்கு பெண்ணும் அவளது உறுப்புகளும் தேவைப்படுகின்றனவே! ('நடத்த கெட்டவ எப்டி பேசறா பாரு’ ன்னு சொல்வாங்களோ?) இந்த விஷயத்தில், ‘பெரும்பான்மையான / சிறுபான்மையான’ ஆண்கள் என்று நான் குறிப்பிட அவசியமில்லாது போனது எவ்வளவு பெரிய அசிங்கம்!

இப்படி, சின்னச்சின்ன செயல்பாடுகள் தான் ஒட்டு மொத்த வடிவெடுத்து இன்று கொலையில் வந்து முடிகிறது. பணத்தைச் சம்பாதிக்கக் கற்றுத் தரும் தற்கால கல்வித்திட்டம், சகமனிதனை எப்படி மதிக்க வேண்டும் என்பதனை சொல்லித்தர மறந்து விட்டது. மாரல் சைன்ஸ் வகுப்புகளெல்லாம் இன்று பேச்சுக்குக் கூட நடப்பதில்லை. ‘மை கிட்ஸ் ஆர் ஸ்டடியிங் இன் அப்ராட்’ எனச் சொல்ல விரும்பும் பெற்றோர்கள் ஒரு நல்ல மனிதனை உருவாக்கும் தலையாயக் கடமையை மறந்து விட்டார்கள்.

புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்ட கதையாய், மேற்கத்திய பெண்ணியத்தை நம் நாட்டில் திணித்துக் கொண்டு பெண்களும் திணறிக்கொண்டிருக்கிறோம். பார்வையை திருத்தும் கருவியாக செயல்படுவதை விட்டு விட்டு, ஆடைச்சுதந்திரத்திற்காகவும், அற்ப போதைக்காகவும் அல்லவா பாடுபடுகிறோம்? (இப்போ பொண்ணுங்களும் என்ன திட்டுவாங்களோ?!)

ஊடக விசாரணையால் (Media Trial), கேடான விளைவுகளை மட்டும் தான் அளிக்க முடியும் என்பதற்கு இது ஒரு சான்று! ‘அடிடா அவள உதடா அவள வெட்றா அவள’, ‘அவ ஷேப்பு அப்பபாப்பாப்பா’ போன்ற பாடல்களுக்கு விசிலடித்து விட்டு, இன்று பேஸ்புக்கில் திரைப்படங்களை மட்டும் சாடிக்கொண்டிருகின்றனர். சில நல்ல படைப்புகளுக்கே கொடிப் பிடித்து மறுப்பு தெரிவித்த நீங்கள், இம்மாதிரியான படைப்புகளையும் தடுக்கலாமே? எல்லாம் ஒரு சில மாதம் கூவிவிட்டு, மறுபடியும் பருப்பு வடை செய்முறை கதை தான்!

இவ்வளவையும் தாண்டி ஒரு பெண் வெளியில் வந்தால், அதனையும் துச்சப்படுத்துவது இயல்பாகிவிட்டது! நல்லவளோ கெட்டவளோ, அனைத்து விதமான பெண்களுக்கும் இங்கு துச்சமாக ஒரு பெயருண்டு! (பட்டியலிட தேவையில்லை!)

பெண் எனப்படுபவள் போற்றுதலுக்குரியவள், பெண் எனப்படுபவள் கடவுளின் பரிசு, பெண் எனப்படுபவள் புனிதமானவள், பெண் எனப்படுபவள் குடும்பத்தின் குத்து விளக்கு – ‘இப்படி எந்த ஈர வெங்காயமும் எங்களுக்கு வேணாம்!’. பெண்ணை சகமனிதியாக, தோழியாக மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்! அது போதும்.

                                                      - வசு.



Saturday, 2 April 2016

உடலதிசயம்!

பொதுவாக ஜுரம் தலைவலி என்றால் உடலுக்கு குளிரூட்டும் பண்டம் எதையும் எடுத்துக்கொள்ளத் தோன்றாது. இம்முறை ஜுரம் வந்தபோதோ, குளிர்ந்த/ குளிரூட்டும் பதார்த்தங்களையே உடலும் மனமும் விரும்பிக்கொண்டிருந்தன. ‘வெந்நீரை மட்டும் குடி’ என்ற அம்மாவின் அதட்டல்களையும் மீறி குளிர்ந்த பானங்களையே தேர்ந்தெடுக்கும் அளவுக்கு சூடான உணவின் மீது எரிச்சல். என்னடா இதுவென்று வியந்து கொண்டிருந்த நிலையில் தான் அம்மை போட்டிருக்கிறது என்பதனை மருத்துவர் கண்டறிந்தார். சூடாக எதையும் உட்கொள்ளக் கூடாது என்பதனை மருத்துவர் கூறும் முன்பே எனது உடல் எனக்கு உணர்த்தியதை எண்ணி ஆச்சர்யமாக இருந்தது!
அம்மையின் தாக்கத்தை விட, உடல் அளித்த வியப்பு தான் எனக்கு மிகுதி. உடலை நன்கு கவனித்தபோது தான் புரிந்தது, தனக்கான தேவைகளை, தான் சரியாக செயல்படுவதற்கு வேண்டிய காரணிகளை தாமே அறிந்து நமக்கு குறிப்பளிக்கிறது மனித உடல். குறிப்பினை அறிய விடாமல் தடுப்பது நமக்கு எல்லாம் தெரியும் என்ற அதிமேதாவித்தனம் தான்.
இவ்வுலகத்தில் தாமாகவே இயங்கும் சிறந்த இயந்திரம், மனித உடல்! கருவில் உள்ள குழந்தையின் நரம்பு மற்றும் தசை வளர்ச்சிக்கு தேவையான தாதுக்களும், கர்ப்பிணிகளின் மலச்சிக்கலை தீர்க்க கூடிய வைட்டமின்களும் நிறைந்தது மாங்காய். இதனை நன்கறிந்த மனித உடல், கர்ப்பிணிகளை மாங்காய்க்கு ஏங்க வைத்து விடுகிறது.
மாதவிடாய் காலத்தில் சில ஹார்மோன்களின் காரணமாக மன அழுத்தம் மிகுந்து இருக்கும். அந்த ஹார்மோன்களை அமைதிப்படுத்தி மூளையினை சாந்தமாக வைக்கும் தன்மை கொண்டது சாக்லேட் மற்றும் இனிப்பு பண்டங்கள். மாதவிடாய் நாட்களில் மாதர்களை சாக்லேட் பக்கம் தள்ளுவதும் உடலின் தேவை தான்.
இரத்தசோகை உள்ளவர்கள் அரிசியினை அதிகம் விரும்புவதற்கும் உடலின் தன்மை தான் காரணம். உடலின் இரும்பு சக்தியை அதிகரிக்க செய்யும் வல்லமை அரிசியில் உள்ளது. அதுமட்டுமல்லாது, இரத்தசோகையினால் உண்டாகும் சோர்வினைச் சீர் செய்ய, அரிசியில் உள்ள கார்போஹைட்ரேட் பெரிதும் உதவுகிறது.
இதுபோன்ற எத்தனையோ தருணங்களில் தமக்குத் தேவையானதை தாமே நிறைவேற்றிக்கொள்கிறது மனித உடல். தேவை இல்லாதவற்றை உடலில் செலுத்தும்போது அதனை வெளியேற்றவும் உடலுக்கு நன்கு தெரியும். ஒத்துக்கொள்ளாத உணவினை உண்கையில் வயிறு கெடுவதும், வாந்தி அல்லது பேதி ஆன பின்பு தாமாகவே உடல் சீராவதும் நாம் பல முறை உணர்ந்திருப்போம்.
உணவின் அளவைக் கட்டுப்பாட்டில் வைப்பதிலும் நமது உடல் கில்லாடி. சில சமயங்களில் ரெண்டு இட்லிகளுக்கு மேல் சாப்பிட இயலாது. சில சமயங்களில் பத்து இட்லிகளுக்கு மேல் உண்டாலும் போதாது போல் தோன்றும். இவையெல்லாம் சின்னச் சின்ன சமாச்சாரங்கள் என்று நாம் எண்ணினாலும், உடலுக்கான தேவையினை தாமே கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்கிறது என்பது ஆச்சர்யமளிக்கும் சங்கதியே!
வளர்ந்து வரும் டயட்டிங் கலாச்சாரம் நமது உடலுக்கு எதிர்மறை விளைவுகளை அளித்துக்கொண்டிருக்கிறது என்பது தான் உண்மை. டயட்டிங் என்ற பெயரில், உடல் நமக்கு அளிக்கும் குறிப்புகளை உதாசீனப்படுத்தி, பட்டினி கிடந்து நம் உடலுக்குத் தேவையான மூலப்பொருட்களை கிடைக்க விடாமல் தடுப்பதனால், உடலின் இயங்கும் தன்மை பாதிக்கப் படுகிறது.
இதற்கு பதில், பத்தியமாக உணவெடுத்துக் கொண்டோமெனில் உடல் தனக்குத் தேவையானவற்றை நமக்கு குறிப்பளித்து விடும். எவ்வளவு சிறந்த இயந்திரமாயினும் அவ்வப்போது எண்ணெயிட்டு தானே ஆக வேண்டும்!
உடலின் குறிப்புகளை நாம் அறியத் தவறி ஆங்கில மருந்தினை எடுத்துக்கொள்கையில் அம்மருந்தே உடலின் மொழியை அழித்துவிடுகிறது. வாந்தி எடுத்தால் தான் வயிறு சரியாகும் என்கிற சில நிலைகளில், ஆங்கில மருந்து மூலம் வாந்தியைக் கட்டுப்படுத்த முயற்சிக்கும்போது நமது உடல் பழுதடைகிறது.
பெரிய நோய்கள் பலவற்றைச் சீர் செய்ய ஆங்கில மருந்து உதவுகிறது என்றாலும், தொட்டதற்கெல்லாம் மாத்திரைகளை விழுங்க நினைத்தால், நமது அதிசய இயந்திரத்திற்கு வேலையே இல்லாமல் போய், துருப்பிடித்து விடும்.
நம் உடலில் ஏற்படும் எந்த ஒரு நோயும் இயற்கையாக வருவது அல்ல என்று ஒரு ஆய்வு கூறுகிறது. எந்த ஒரு நோயினையும் எதிர்கொள்ளும் தன்மை நம் உடலுக்கு உள்ளது என்பதனையும் அதே ஆய்வு கூறுகிறது. இதனை முன்பே கணித்த நமது சித்தர்கள் தங்களது மருத்துவக் குறிப்புகளில் ‘தன்வினை புறவினை தாழினும் மிகினும் உடலைப் பிணிக்கும் உண்மையிது தாமே’ என்று கூறியுள்ளனர்.
உடலின் செயல்பாட்டினை பற்றி பேச பெரிய நோய்களை அறிய வேண்டிய அவசியமில்லை. நமது அனைத்து உறுப்புகளையும் அன்றாடம் கண்காணித்து, தேவையான ரசாயனங்களை தேவையான பகுதிக்கு பாய்ச்சி, தேவையில்லாதவற்றை அகற்றி சுத்தம் செய்து, அசுத்தத்தை வெளியேற்றி, பழுதடையாமல் இருக்க தாமே தம்மை கவனித்துக்கொள்ளும் நம் உடல், ஒரு உலகையே உள்ளடக்கி வைத்துள்ளது.
மனித உடல் மட்டுமல்லாது மற்ற விலங்குகளுக்கும் இந்த தன்மை உள்ளதாய் ஆய்வுகள் கூறுகின்றன. செரிமான பிரச்சனை இருந்தால் தானாகவே புல் உண்ணுமாம் நாய். வயிற்றுப்பிரச்சனை இருந்தால் மண்ணைத் தின்னுமாம் கிளி. சுலபமாகப் பிரசவிக்கப் புதர்களில் உள்ள தண்டுகளையும் இலைகளையும் எடுத்துக்கொள்ளுமாம் யானை. எப்பொழுது என்ன உண்ண வேண்டுமென்று மனிதர்களை விட பிற விலங்குகளுக்கு நன்கு தெரியுமாம்! அது சரி! இயற்கையை உதாசீனப்படுத்த மனிதர்களைப் போல் மற்ற விலங்கினங்களுக்கு ஆறாவது அறிவு இல்லையே!
இந்த இயந்திரத்திற்கு மருந்து வேண்டுமானால் நாம் கண்டுபிடித்திருக்கலாம். ஆனால் அதன் இயக்கமும் செயல்பாட்டு யுக்தியும் இப்பிரபஞ்சத்தின் ரகசியங்களில் ஒன்றே! நம்மை மீறிய, நமக்கு மேலான சக்தி ஒன்று இவ்வுலகில் உள்ளதென்பதற்கு நம் உடலே சிறந்த சாட்சி!

தலைசிறந்த கட்டுமானமான மனித உடல், உலக அதிசயங்களில் ஒன்றே! நாம் எவ்வளவு உதாசீனப்படுத்தினாலும் நம் உடல் நமக்கு குறிப்பளித்துக்கொண்டே தான் இருக்கும்! குறிப்பினை புரிந்து, மகத்துவம் அறிந்து, இயற்கையோடு இயைந்து, நலமுடன் வாழ்வோம்!
                                              - வசு