அரவணைப்பை உருவகப்படுத்த வேண்டுமெனில்,
பெரும்பாலும் நாம் அனைவருமே நம் அப்பாவைத் தான் கூறுவோம். அதுவும் பெண் குழந்தைகள்
என்றால், அப்பாவே அவர்களுக்கு உலகில் சிறந்த மனிதன். எவ்வளவு பெரிய ஆணாதிக்கவாதியாக
இருப்பினும், ஒரு தகப்பனுக்கு தன் மகள் என்றுமே தன்னை ஆளும் ராணியாக இருத்தலில்
தான் மகிழ்ச்சி. பெண்ணும், தான் மணக்கவிருக்கும் ஆண்மகன் தன் தந்தையை போலானவனாக
இருக்க வேண்டும் என்பதையே எதிர்பார்த்திருப்பாள். சொல்லப்போனால் ஒரு பெண்ணினுடைய
முதல் காதலும் அவளது தந்தை தான். ஒரு பெண் தைரியசாலியாக இருக்க வேண்டுமெனில், அவளின்
தந்தைக்கு அதில் பெரும் பங்கிருக்கிறது.
பொட்டு வைத்து வளையல் மணி போட்டு
அலங்கரித்து, கழுத்தைக் கட்டிக்கொண்டு உறங்கி, அம்மாவின் அதட்டல்களை
மேல்முறையிட்டு, யானை சவாரி செய்து, கைப்பிடித்துப் பள்ளிக்குச் சென்று, மோட்டார்சைக்கிளில்
முன் அமர்ந்து, மதிப்பெண் அட்டை காண்பிக்க பயந்து, புதுப் பொருள் கேட்டு
அடம்பிடித்து, எதிர்த்துப் பேசி இப்படி எத்தனை தான் செய்தாலும் அத்தனையும் பொறுமையாய்
ஏற்றுக்கொள்வதில் ஒரு தந்தைக்கு நிகர் தந்தையே.
தந்தையின் அதட்டல்களை எழுத்தாளர்
பாலகுமாரன் அழகாகக் குறிப்பிடுவார். விக்கலை நிறுத்த பயமுறுத்தப் படுவது, விக்கலை
நிறுத்தத் தானே தவிர உங்களை பயம் கொள்ள வைக்க வேண்டியில்லை. அப்படிப் பட்டது தான்
அப்பாவின் அதட்டல்களும். மகளை அதட்டிவிட்டு மகளை விட அதிகமாக வருத்தப்படும்
அப்பாக்கள் தான் இங்கு அதிகம். அம்மா எவ்வளவு திட்டினாலும் கண்டுக்கொள்ளதவர்கள்,
அப்பாவின் முறைப்பிற்கே கண்ணீர் தளும்பும் மகள்களும் இங்கு அதிகம்.
வயதுக்கு வந்த பின் மகளிடமிருந்து சிறிது
விலகும் அப்பாக்கள், பொறுப்பு எனும் போர்வையைப் போத்திக் கொண்டு பிரிவு தரும்
கவலைக்காய்ச்சலில் இருந்து தப்பிக்க நினைக்கிறார்கள். அந்நேரங்களில், அப்பாவினை
தன் பிள்ளையாய் தத்தெடுக்கிறாள் ஒவ்வொரு பெண் மகளும்.
அப்பாவின் அலுவலுக்கு உதவி செய்ய
மகள்களுக்கு என்றுமே பேரானந்தம். தான் அறியாதவைகளை தன் மகள் தனக்கு
சொல்லிக்கொடுக்கும்போது, தன்னையே மறந்து பெருமையடைகிறார் ஒவ்வொரு தந்தையும்.
அதற்காகவே தெரிந்ததைக் கூடத் தெரியாதது போல் சில நேரங்களில் நன்றாக நடிக்கிறார்கள்
இந்த தந்தைமார்கள். மகளின் பெருமையை பீத்திக் கொள்வதில் அனைவரையும் தோற்கடித்து
விடுவார்கள் இந்த அப்பாக்கள்.
மகளுக்கு, பிற ஆணால் தொல்லை எனில் தீயில்
காய்ந்த கரண்டி போல் கொதித்து விடுகின்றனர் அப்பாக்கள். தன் பாதுகாப்பிற்காகப்
பாடுபடும் அப்பாக்களைப் பெற்ற பெண்களும், படரத் தூண் கிடைத்த கொடி போல் வாழ்வில்
பற்றுடயவர்களாகவே படருகிறார்கள். ஆண் பிள்ளை இல்லையோ அய்யோ பாவம் என பிறர்
கூறும்போது ‘மகனுக்கு மகனா மகளுக்கு மகளா என் அப்பன் ஆத்தாவா எம்மக இருக்கா, அது
போதும்’ என்று சொல்லும் அப்பாக்களுக்கு எல்லாம் மகள் என்பவள் மகத்துவமானவள்.
ஆண் வர்கத்தின் மீதே கோபம் கொண்டவளாயினும்
அவளுக்கு நம்பிக்கை அளிப்பது தந்தை தான். ஒரு பெண்ணுக்கு, ஒரு ஆசானாக, அன்பானவனாக,
வழிகாட்டியாக, முன்மாதிரியாக, முதல் மனிதனாக, எதிர்பார்ப்பில்லாத அன்பினையும்
ஆபாசமில்லாத காதலையும் ஒரு ஆணினால் கொடுக்க முடியும் எனில் அது அப்பாவாக மட்டுமே
இருக்க முடியும்.
அப்பாவினையுடைய அத்துணை மகள்களுமே இளவரசிகள்தான்,
மகள்களைப் பெற்றெடுத்த அத்துணை அப்பாக்களும் அரசர்கள் தான். மகளை மணமுடித்து
கொடுத்த பின்னும் அவளை ஒரு குழந்தையாகவே பாவிப்பதில் தந்தைக்கு நிகர் அவரே! பல
நேரங்களில் அவளைத் தாயாக நினைப்பதும் இந்த அப்பாக்கள் தான். சிறந்த கணவனாக
இருக்கத் தவறினாலும், சிறந்த தந்தையாக இருக்க மறப்பதில்லை, அழகான அப்பாக்கள்.
மிகக் கொடிய விஷயம் என்று ஒன்று ஒரு
மகளுக்கு இருக்க முடியுமெனில், அது அவளது தந்தையின் கண்ணீராகத்தான் இருக்க
முடியும். விஷத்தை விடக் கொடியது ஒரு தந்தையின் கண்ணீர். பொம்மையாய், உறுதுணையாய்,
தூணாய், துயர் நீக்கியாய், காதலாய், பிள்ளாய், ஆசானாய், ஆத்மார்த்தமாய்,
அவதாரங்கள் பல எடுத்த இந்த மனிதன் என்றுமே சிரித்துக்கொண்டே இருப்பது தான் ஒவ்வொரு
மகளுக்கும் ஆனந்தம்.
என்னைப் பொறுத்த வரையில் அப்பா என்பவர்
அலாவுதீன் பூதம் போலானவர். சிறிது பயமளித்தாலும் கேட்ட அனைத்தும் நிறைவேற்றும்
அற்புத பூதம்! அன்பு கொண்டு அடிமைப் படுத்தப் பட்ட இந்த பூதம், தன் மகாராணி மகள்
கட்டளையிடும் முன்னே நினைத்ததை நிறைவேற்றுவதையே மூச்சாகக் கொண்டுள்ளது. மகளாய்
இருப்பதை விட வேறு பேறு இருப்பின், தன் தந்தையைப் பற்றி தன் மகளுக்கும் மகனுக்கும்
கூறும் பொழுதுகளாகத் தான் இருக்கக் கூடும்!
அப்பாவின்
மகள்,
வசு.
No comments:
Post a Comment