Monday, 15 May 2017

இது புயலைக் கடத்தும் கரை.

நகரத்தின் முக்கியப் பகுதியில் நின்று கொண்டிருந்த எனக்கு, புயல் வரப்போகும் செய்தியை யாரும் தெரிவிக்கவில்லை. சாதகமாய் இருந்த வானிலை, சற்றே மாறத்தொடங்கியது. இணையக் குறிப்புகள் அறிந்திடாத நான், இயற்கைச் சீற்றத்தை வைத்தே அரங்கேற இருக்கும் இன்னலை அறியத் தொடங்கினேன்.

காற்று மெல்ல மெல்ல அழுத்த, கலக்கம் தொடங்கியது என்னுள். அழுத்தம் அதிகமாகையில் காதல் மறந்து காளியாகத் தொடங்கினேன். தடித்த என் தோள்பட்டைகளும் என்னைத் தவிர்க்க ஆரம்பித்தன. கண்டு என்னை வியந்தோர் கூட, தொலைவில் இருந்தும் பயந்தே போயினர். புயலுடன் போராடுகையில், இப்புவி புதைந்து கொண்டிருந்தது.

என்னைக் கடக்கவே பயந்தனர் பலர். என்ன ஆவேனோ என்று மிரண்டுபோயிருந்த  நான் கலைந்த, தலையுடன் கைகளை உயர்த்தியும் தாழ்த்தியும் கதறத்தொடங்கினேன். உதவி கேட்ட என்னை, மிரட்டலிடுகிறேன் எனத் தவறாய் புரிந்து கொண்டான் போலும் அந்த வானத்துக் காதலன். சாட்டைகள் தடிக்கத் தொடங்கின!

தண்டனையோ இது உம்மின் பகுதியாய் நான் இருப்பதற்கு என்றெண்ணி காளி நடனம் புரியத்தொடங்கினேன். நடனமிட்டு, கூச்சலிட்டு, சலசலத்து, சந்தேகித்து, கதறலிட்டு, கண்ணீர்விட்டு, விரட்டியடித்து, மெல்ல சாயத்தொடங்கினேன்.

பாவம் என்றார் சிலர், தாங்கிப்பிடிக்கத் தயாராய் இருந்தனர் பலர். பக்கம் வரவே தயங்கி நின்றனர் சிலர். ஒரு பெண் மட்டும் எதிர் கட்டிடத்திலிருந்து எனை வெறித்துப் பார்த்திருந்தாள். ஏதோ குறிப்பெல்லாம் எடுத்துக் கொண்டாள். காற்று தள்ளினாலும், புயல் சாய்த்தாலும், சாட்டையெனச் சீறினாலும், காதல் கடுத்தாலும், வீழ்ந்து மட்டும் விடாதே என அவளது பெருவிழிகள் எனக்கு கட்டளையிட்டுக் கொண்டிருந்தன.

காற்றடித்தது, வான் வஞ்சித்தது, புயல் அழுத்தியது, அவளது வாள்விழிகள் கட்டளையிட்டுக்கொண்டே இருந்தன. உறைந்து நின்றேன் ஒரு நிமிடம்! மீண்டும் நடனமாடத் தொடங்கினேன். இம்முறை புரிந்ததோ களிநடம்!

என்னைக் கண்டு பயந்தோரெல்லாம் என் வலுவினைக் கண்டு வியந்தோரானர்! ஆட்டுவித்தார் முன்பு, ஆடினேன் நன்று. ஆட்டம் பயின்று, ஆனந்தத்தாண்டவமிட தொடங்கினேன் பின்பு.

புயல் ஒன்று புரட்டுகையிலும் பல வண்ணக் குடை பிடித்தவரைக் கண்டு முடிவெடுத்தேன்! புயல் கரையைக் கடக்கவில்லை எனினும், புயலை நான் கடப்பேன். கடத்துவேன்!

-  -   இப்படிக்கு,
புயலுக்கு விழ மறுத்து
ஓங்கியூன்றி நிற்கும்

ஒரு அரச மரம்!

No comments:

Post a Comment