நான் : இறங்குவது இழிவென்பதை பொய்ப்பிக்கவே
பெய்கிறதோ இந்த மழை?
மழை : வானம் கருத்து, மேகம் இடித்து கீழேத்
தள்ளப்படும் நான், கீழிருந்து மேலே சென்றவள் தான். இறங்கியதற்காக இரக்கம் கொண்டால்,
நான் மண்ணை எப்படி அறிவது, விண்ணை எப்படி அளப்பது.
நான் : இறங்காமலேயே இருந்து விட்டால் காற்றோடு
காற்றாக காணாமல் போய் விடும் என்பதற்காகவே இறங்குகிறதோ இந்த மழை?
மழை : மண்ணில் கலந்தால் மட்டுமே விண்ணில் பறக்க
முடியும் என்பதனை நன்குணர்ந்த நான், இறங்குவதும் பல விதமான ஏற்றத்திற்காகத்தான், ஏறுவதும்
இறங்குவதற்காகத்தான்.
நான் : இறங்கிய பின் இறுக்கத்தை தவிர்க்கவே, புழுக்கத்தை
முன் அளிக்கிறதோ இந்த மழை?
மழை : புழுங்கினால் மட்டுமே வேகத்தினைக் கூட்டி,
மேகத்தினைக் கரைத்து என் நோக்கத்தினை நிறைவேற்ற முடிகிறது. அப்புழுக்கத்தைப்
போக்கவும், என்னால் மட்டுமே முடியும்!
நான் : அமைதியை அறிய புயலொன்று வேண்டுமென்பதால்தான்
பேயென பெய்கிறதோ இந்த மழை ?
மழை : என்னைத் தடுக்க, மேகத்தினைக் கலைக்கும்
காற்றுடன், போரிட்டால் மட்டுமே இப்பாரினில் கலக்க முடியும். மேகத்தின் ஆனந்தக்
கண்ணீரை மெல்லமாய் துடைத்த காற்று, தென்றலாய் வாழ்கிறது, அத்துளிகளைத் தடுக்க நினைக்கும்
ராக்ஷசக் காற்றே புயலென அழிகிறது.
நான் : இறங்கிய பின்னும் நம் நினைவில் இருக்கவே
காணாமல் போகிறதோ இந்த மழை?
மழை : என் இறக்கத்தினைக் கூட கொண்டாடிய உங்களை
குளிர்விக்கவே நான் காணாமல் போக வேண்டியிருக்கிறது. நீங்கள் குளிரில் காய்ந்து
கொண்டிருக்கும் அவ்வேளையில் நான் மெல்ல மேலே ஏறிக் கொண்டிருப்பேன், மறுபடியும்
இறங்குவதற்காக!
# இருப்பினை ரசிக்க மட்டுமல்ல, இயல்பாய்
வசிக்கவும் வைக்கிறது இந்த மழை! #
No comments:
Post a Comment