ஹாய்! என்பதற்கும்,
வணக்கம்! என்பதற்கும், அளிக்கப்படும் மரியாதை, பெரும்பாலானோர் வித்தியாசப்படுத்தி
தான் வைத்துள்ளார்கள். மொழியும் மொழி உணர்வும் இருப்பது நல்லது தான். ஆனால், ஒரு
மொழியினைப் பற்றிப் பெருமையாக பேசுகையில் மற்ற மொழிகளை சிறுமைப் படுத்தும் குணம்
மிகவும் சிறுமையானது. முக்கியமாக, நம் தாய் மொழி தமிழினையும் அந்நிய மொழி
ஆங்கிலத்தினையும் ஒப்பிட்டு, அந்நியனை அரியணை ஏற்றி, தாயினைத் தரையில் தவிக்க
விடும் செயல், கண்டிக்கத்தக்கது.
தமிழை, ‘தமில்’
எனும்போது கண்டுக்கொள்ளாதவர்கள், ஆங்கில வார்த்தைகளில் உச்சரிப்புப் பிழை
ஏற்பட்டால் கொதித்தெழுகின்றனர், அதனைக் கேலியும் செய்கின்றனர். ஆங்கிலத்தினை
முறையாக பேசினால் மட்டுமே சமூகத்தில் மதிப்பளிக்கப்படும் சூழல், நிலையாக நிலவிக்கொண்டு
தான் இருக்கிறது. அப்படிப் பார்த்தால் நம் நாட்டினில் யாருக்குமே மதிப்பளிக்க
இயலாது. ஆங்கிலம், அந்நிய மொழி என்பதனை புரிந்துக்கொள்ளாவிடினும் நாம்
பயன்படுத்துவது இந்திய – ஆங்கிலம் மட்டும் தானே தவிர முறையான ஆங்கிலம் அல்ல என்பதனைப்
புரிந்துக்கொள்ள முயற்சித்தால் போதும், தலையினில் கனம் ஏறாது இருக்கும்.
ஆங்கிலத்தை தவிர்க்க
வேண்டும் என்பதல்ல என் வாதம். மொழிகள் பல அறிவது அவசியம் தான். இருப்பினும், நம்
தாய் மொழியைத் தவிர அறியப்படும் மற்ற மொழிகள் யாவும், கருத்துப் பரிமாற்றத்தினை
எளிதாக்குவதற்கு மட்டும் தான் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. தாய் மொழி
மட்டுமே நம் உதிரத்திலும், உயிரிலும், மண்ணிலும், மனத்திலும் இரண்டறக் கலந்து நமது
வாழ்க்கை முறையினை எடுத்துரைக்கும் முகமாய்ப் பொலிகிறது. அப்படி இருக்கையில், தமிழைத்
தாய் மொழியாய்க் கொண்ட அனைவரும், தமிழைப் போற்றவில்லை எனினும் தாழ்த்தாமல்
இருப்பது தான் உத்தமம்.
மக்களை அடிமைப்படுத்த
வேறு வழி தெரியாத ஆங்கிலேயர்கள், மொழியினைக் கருவியாய்ப் பயன்படுத்தி, ‘ஆங்கிலம்
அறியாதோர் அறிவில் சிறியோர்’ என்ற சுயநல எண்ணத்தினை மக்களில் விதைத்து,
அதற்கேற்றாற் போல் நமது பாடத்திட்டங்களையும் வடிவமைத்த சூழ்ச்சிக்கு இன்று வரை
நாம் பலியாகிக் கொண்டு தான் இருக்கிறோம். வள்ளுவனும் கம்பனும் நமக்களித்த
கோட்பாடுகளை ஒரு ஆங்கிலேயன் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தால் மட்டுமே, அதனை
கோட்பாடுகள் என ஏற்றுக் கொள்கிறோம்.
ஆங்கிலம் தெரியாது
என்று கூற கூசும் நா, தமிழ் தெரியாது எனும் போது கூச்சமே இல்லாமல் பெருமைப்படுவது,
தமிழினைச் சிறுமைப் படுத்தவில்லை, தமிழனைச் சிறுமைப்படுத்துகிறது. தமிழ் நம் குடி!
‘ஒருவீர் தோற்பினும் தோற்பதுங் குடியே’, என்பதனை நினைவில் கொண்டால் மொழிகளைக்
கடந்த புரிதல் இந்த சமூகத்தில் ஏற்படும்.
இதற்கானக் காரணங்கள்
அனைத்தும் நமது வீட்டிலிருந்தே தொடங்குகிறது. பிள்ளைகள் பெற்றோரையே ஆங்கிலத்தில்
தான் அழைக்க வேண்டும் என்ற குற்றச்சாட்டினைக் கூட விடுங்கள்! ஒரு தொலைக்காட்சி
நிகழ்ச்சி பார்ப்பதிலும், ஆங்கிலத் தொடர் பார்க்கிறேன் என்று கூறுவதை மட்டுமே
பெருமையாக கொள்பவர்கள் பலர். பாருங்கள்! தெரிந்த மொழிகளிலெல்லாம் நிகழ்ச்சிகளைப்
பாருங்கள், தவறில்லை. ஆனால் அதனை வைத்து ஒருவரை மதிப்பிடாதீர்கள்.
ஆங்கிலத்தில்
பிழையிருப்பின் திருத்துங்கள். தமிழில் பிழை இருப்பின் மட்டும் வருந்துங்கள்.
அந்நிய மொழி ஆங்கிலத்தினை சரியாக அறியவில்லையெனில், நமக்கான சூழலும் சுற்றி
இருப்பவரும் கற்றுக் கொடுப்பவரும் மட்டுமே முக்கியமானக் காரணம். தமிழினை அறியவில்லையெனில்
அதற்கு நாம் மட்டுமே காரணம். ஒரு அந்நிய மொழி நம் மக்களையே அந்நியப் படுத்துகிறது
எனில், அநியாயக்காரர்கள் நாம் அல்லவோ?!
No comments:
Post a Comment