‘அவன் இப்படிச் செய்து விட்டான்’, ‘இவள் அப்படிச் செய்து விட்டாள்’, ‘அங்கு நிலைமை ரொம்ப மோசம்’, ‘இங்கு ஏன் இப்படி இருக்கின்றது’ போன்ற குறைகூவல்கள் நமது காதுகளை துளைப்பது இயல்பாகிவிட்டது. உண்மையில், இவ்வுலகை இந்த அளவிற்கு மோசமானதாக காட்சிப்படுத்த எந்தவித அவசியமும் இல்லை.
பொதுவாக, நம்முடைய மனநிலையானது, நாம் வாழும் சூழலையும், நம்மைச் சூழ்ந்துள்ள மக்களையும் பெரிதும் சார்ந்திருக்கும் பட்சத்தில், குறைகளை மட்டுமே பெரிதாக்கி நமது நிம்மதியினை நாமே கெடுத்துக் கொள்கிறோம். இவ்வுலகில் மேன்மக்கள் - கீழ்மக்கள் எனும் பாகுபாடு என்பது, மாறக்கூடிய நமது விருப்பு - வெறுப்பு சார்ந்தவையே தவிர நிலையானவை அல்ல. பின்லேடனை விரும்புவாரும் உள்ளனர், காந்தியை வெறுப்பவரும் உள்ளனர்.
ஆங்கிலத்தில் Utilitarian Theory (Maximum good for the maximum number) என்றழைக்கப்படும் பயனுடைமைச் சார்ந்த கொள்கை பொறுத்தே தேவை எது? அல்லது எது தேவையில்லை? என்பது தீர்மானிக்கப்படுகிறது. அம்முடிவுகள் யாவும் சூழல், காலம், விருப்பு, வெறுப்பு போன்ற பல காரணிகள் சார்ந்ததாகவே அமைகின்றன. நம்மை நாமே கட்டாயப்படுத்தியாவது நமக்கு வாய்த்தவைகளை விரும்பிட முயல்கையில், நம்மை அறியாமலேயே நாம் அமைதி கொள்கிறோம் என்பது தான் உண்மை.
பரெடோ விதியின் படி (Pareto’s Law) இவ்வுலகில் தீயவை என்பது 20% இருப்பின் மீதம் 80% நம்முடய மனதினைப் பொறுத்து தான் நல்லவை, தீயவை அமைகிறது. முடிவெடுக்கும் கோல் நம் கையில் இருக்கையில் முழி பிதுங்கிக் கொண்டிருக்கிறோம் பெரும்பாலான நேரங்களில். வானத்தில் பறப்பதும் பூமியில் இருப்பதும் அவரவர் எண்ணங்களே என்ற, பழைய பாடல் தான் நினைவிற்கு வருகின்றது.
வாழ்வதற்கான
காரணிகளை நாம் இழந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு நொடியிலும், எங்கிருந்தோ மாயமாய் ஒரு
காரணம் வந்து கண் முன் நிற்கும். குறைகளை மட்டுமே கூறி பயமுறுத்திக்
கொண்டிருந்தோமெனில் நமது அடுத்த சந்ததியினர் தெருவில் நடக்கக் கூட விரும்ப
மாட்டார்கள்.
பெற்றோருடன் சண்டையிட்டு வரும் நேரங்களில் நண்பர்களின் தழுவலும், நண்பர்களிடம் சண்டையிட்டு வருகையில் பெற்றோரின் அணைப்பும், துணையிடம் கருத்து வேறுபாடு ஏற்படும் நேரத்தில் பார்க்கும் குழந்தையின் சிரிப்பும், சமூகமே நமக்கு எதிராய் இருக்கின்றது என்றெண்ணுகையில் கிடைக்கப்பெறும் ஆறுதல் வார்த்தைகளும், எதற்குமே நாம் லாயக்கில்லை என்று எண்ணிடும் தருணங்களில் கண் முன் வரும் அத்தனை சாதனையாளர்களும், அவர்கள் கடந்து வந்த கடினப் பாதைகளும், நம் மனதை இதமாக்கும் இசையும் இயற்கையும், நாம் சிரிக்கக் காரணமாய் விளங்கும் சின்னச் சின்னக் காரணிகளும், இவ்வுலகை ஏற்றுக்கொள்ள வைத்து நம்மை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தி விடுகின்றன.
இங்குப் பிரச்சினை என்னவெனில் அந்த சின்னக் காரணிகளை நாம் கவனித்திட மறுப்பது தான். காசில்லாக் காலத்தில் பகிரப்படும் பண்டங்கள், நோய்வாய்ப் படும்போது நமக்காக நடத்தப்படும் பிரார்த்தனைகள், பிரிந்து செல்கையில் அரும்பிடும் கண்ணீர்த்துளிகள், கூட்ட நெரிசலையும் தாண்டி கேட்கும் இரயிலின் சத்தம், அடைமழையின் பின் அரும்பும் அழகிய காளான்கள், ஆய்ந்த பின் கையோடு தங்கும் புதினாவின் மணம், விருப்பில்லாப் பயணங்களிலும் கிடைக்கும் புது முகங்கள், துக்க வீட்டில் தூக்கிக்கொள்ளச் சொல்லும் குழந்தையின் கைகள், தோற்கும் தருணங்களில் கிடைத்திடும் தோள்கள், தனிமையில் கேட்டிடும் காற்றின் சத்தம், போக்குவரத்து நெரிசலுக்கிடையில் கடந்து செல்லும் குருவிகளின் கூச்சல் மிகுந்த சாலை, வேகத் தடைகளின் மேல் ஏறி இறங்கையில் உணர்ந்திடும் வயிற்றின் அலைகள் என எண்ணற்ற சிறிய விஷயங்கள் நமக்கு வாழ்வதற்கான காரணங்களையும் மகிழ்ச்சியானத் தருணங்களையும் அள்ளி வழங்கிக் கொண்டிருக்கின்றன.
கீதையில் சொல்வது போல் மான அவமானங்கள், ஏமாற்றங்கள், தோல்விகள், நிலைகுலைந்துப் போகச்செய்யும் காலச் சூழ்நிலைகள், நம்பிக்கைத் துரோகங்கள், இழப்புகள், வஞ்சகச் சூழ்ச்சிகள், எதிர்ப்புகள், நெருங்கியோரின் சூதுகள் என இவையனைத்துமே மானிட வாழ்வின் அன்றாட நிகழ்வுகள் தான். இவைகளையெல்லாம் மட்டும் பிடித்துக்கொண்டு பிதற்றிக்கொண்டிருப்பதும், மீண்டு வந்து வாழ்கையில் பிடிப்பைப் பெறுவதும் அவரவர் கைகளில் இருக்கும் கோலைப் பொருத்து!
குறையே இல்லை இந்த சமூகத்தில் என்றுக் கூறவில்லை. குறையினைச் சுட்டிக் காட்டவே கூடாதென்றும் கூறவில்லை. குறையினை மட்டுமே சுட்டிக் காட்டவேண்டாம் என்பது தான் என் எண்ணம். இங்கு ஞானிகளுக்கும் கடந்த காலம் உண்டு, பாவிகளுக்கும் எதிர் காலம் உண்டு.
வெறுப்பு விடுத்து, மகிழ்ச்சியான சூழலை ஏற்படுத்திக்கொள்வதற்கான எண்ணற்ற வாய்ப்புகளை இவ்வுலகு அளித்துக் கொண்டே தான் இருக்கும். அதனைப் பயன்படுத்திக் கொள்வதில் தான் நமது சூழல் அமைகிறது. அனைத்து கெட்டதிலும் நல்லதும் இருக்கிறது என்று மூத்தோர்கள் அடிக்கடி உரைப்பதை, நாமே உணரும் தருணங்கள், உணர்த்தும் பாடங்கள் பல. குறை என்றொன்று இருக்கும் வரை தான் நிறையென்பது யாதென்று நம்மால் அறிய இயலும். குறையினைக் குறைத்துக் கூறி நிறையினை நிரப்பி விட்டோமெனில், தானாக குறைபாடுகளும் குறைந்துவிடும்.
இங்கு அனைவருக்கும் இடமுண்டு. அனைவருக்கும் மக்களும் உண்டு. வெகு நாட்கள் நம் பயணத்தில் வராமல் பலர் போனாலும் அவர்கள் இருந்த நேரத்தில் நமக்காய் இருந்தத் தருணங்களும் அழகு தான்! நமக்கு அது தேவையும் பட்டது. இப்படி, ஒவ்வொரு நிலையிலும் நமக்கானவர்கள் இருந்துகொண்டேதான் உள்ளனர்.
அடுத்த நிமிடம் ஒளித்து வைத்திருக்கும் ஆச்சரியங்களை அனுபவிக்க தெரிந்துக்கொண்டோமெனில் ஒவ்வொரு நொடியும் நமக்கு அழகான தருணங்களை அள்ளித்தர காத்துக்கொண்டிருக்கின்றன. சும்மாவா கேட்டு வைத்தான் அந்த முண்டாசுக் கவிஞன், “காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்ப மென்றோ?” என்று.
அதிகம் ஆராயாமல் அனுபவித்தோமெனில், உலகம் அத்துணை அழகானது!
- வசு.

No comments:
Post a Comment