Sunday, 18 January 2015

மல்லுக்கட்டும் ஜல்லிக்கட்டு!

ஜல்லிக்கட்டு என்று பரவலாக அழைக்கப்படும் தமிழரின் வீர விளையாட்டான “ஏறு தழுவுதல்” (ஏறு என்பது காளையைக் குறிக்கும்), இன்று பல சர்ச்சைகளுக்கிடையில் சிக்கித் தவிக்கிறது. இந்தப் பாரம்பரிய விளையாட்டின் தடங்களை அறிந்து கொண்டால் மட்டுமே, தடைகளையும் அதன் காரணிகளான தளைகளையும் களைய முடியும் .

‘சல்லி’ என்றால் காசு. மாடுகளை அடக்குபவருக்கு பரிசாக, மாடுகளின் கொம்புகளில் காசைக் கட்டி விளையாடப்படுவதால் இதனை சல்லிக்கட்டு என்றழைக்கப்பட்டு அதுவே நாளடைவில் ஜல்லிக்கட்டு என்றாகிப்போனது.

காளையை அடக்குபவரின் மீது பெண்கள் காதல் கொள்வதும், அவரையே மணமுடிக்கும் வழக்கம் இருந்ததையும், கலித்தொகை முதலான சங்கத் தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டினை, வாடி மஞ்சுவிரட்டு, வேலி விரட்டு மற்றும் வடம் மஞ்சுவிரட்டு என மூன்று வகைகளாகப் பிரித்துள்ளனர். வாடி மஞ்சுவிரட்டினில், ஓடி வரும் காளையின் திமிலை தொற்றிக்கொண்டு அதிக தூரம் செல்பவரே வென்றவராவர். வேலி விரட்டைப் பொறுத்த வரையில், ஒரு விளையாட்டு மைதானத்தில் காளைகள் ஓட விடப்படும். இந்த காளைகளை அடக்க இளைஞர்கள் பலர் களத்தில் இறங்கி, தத்தம் வீரத்தைக் காட்டுவர். ஒரு நீளமான வடத்தில் கட்டப்பட்ட காளையை  பல இளைஞர்கள் சேர்ந்து அடக்குவது, வடம் மஞ்சுவிரட்டு. இந்த மூன்று வகைகளிலுமே கடைபிடிக்கப்படும் முக்கியமான விதி, காளைகளை காயப்படுத்தாமல் அடக்க வேண்டும்.

காளைகளைக் கொண்டு உழவு நடந்த நாட்களில், அவற்றை அடக்கி அதனோடு இயைந்து வாழ்வது அவசியமானதாக இருந்தது. தற்போது இயந்திரம் கொண்டு உழவு செய்தாலும், இயந்திரமயமான நம் வாழ்வை வளம் பெறச் செய்ய ஏறு தழுவுதல் அவசியமாகும்.

அதுமட்டுமல்லாமல், சீறி வரும் காளைகளை அடக்கும் ஆண்மகனின் வீரமும் தீரமும் திறமுடன் பறைசாற்றப்பட்டது. எதனையும் எதிர் கொள்ளும் துணிச்சலும், வறண்டு போகாத வீரமும் தமிழனின் பண்பெனப் பறைசாற்றிக் கர்வம் கொள்ளும் நாம், இவ்விளையாட்டினை அதற்கான உறை கல்லென உணர்தல் வேண்டும்.

மேற்கத்திய மாட்டுச்சண்டைக்கும் நமது ஜல்லிக்கட்டுக்கும் கொம்பளவும் தொடர்பில்லை. கொலைவெறியூட்டப்பட்ட எருதினைக் கொல்லும் கொடூரத்திற்கும், வீரம் செறிந்த திமில்களையுடையக் காளைகளை அடக்கும் தீரத்திற்குமான வெற்றிக்களிப்பு சமமாகுமா?

ஜல்லிக்கட்டு மாடுகளுக்கு சத்து மிகுந்த உணவுடன், தேவையான உடற்பயிற்சிகள் மட்டுமே அளிக்கப்படுகிறது. இயற்கையோடு இயைந்து வாழ, கால் நடைகளுடனும் நட்பு பாராட்டும் விதமாக அமைந்துள்ள இப்பெருமைமிகு பாரம்பரியம், மிருக வதை என வகைப்படுத்தப்படுவது நியாயம்தானா?

கோத்தகிரி மலையில் அமைந்துள்ள 3500 ஆண்டு பழமையான ஓவியம் ஒன்றில் ஆண்கள் ஏறு தழுவுவது போலான படங்கள் இருப்பதனை ஆராய்ச்சியாளர்கள் உறுதிப் படுத்தியுள்ளனர். மேட்டுபட்டியில் 1500 ஆண்டுகள் பழமையான ஓவியம் ஒன்றிலும் மாட்டினை அடக்குவது போன்ற காட்சிகள் காணப்படுவதாக தொல்பொருள் ஆய்வு தெரிவிக்கிறது.

இந்து சமவெளி நாகரீகத்திலும் காளைகளை அடக்கும் முறைகள் இருந்ததாக நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. இத்தகைய பழம்பெரும் வரலாறு கொண்ட ஏறு தழுவுதலுக்கு, 1113-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட மேற்கத்திய மாட்டுச்சண்டையே காரணமாக விளங்குகிறது எனும் வாதம், நகைப்புக்குரியது.

ஏறு தழுவுவதினால் மாடுகள் வதைக்கப்படுகின்றன, பத்து முதல் பன்னிரண்டு மனிதர்கள் வருடத்திற்கு பலி ஆகிறார்கள் என்று கவலையுறும் மனிதர்களெல்லாம், ஆண்டுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் விவசாயத்திற்கு தண்ணீர் இல்லாமல் தனக்கும் உணவில்லாமல் தற்கொலை செய்து கொள்ளும் அவலத்தை ஏன் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள்? ஜல்லிக்கட்டு மனித உயிரை பறிப்பதால் தடை செய்யப்படுகிறது என்று செய்தி வந்த வேளையில், நண்பன் ஒருவர் தனது பேஸ்புக் பக்கத்தில் ‘’மதுபானக் கடைகளில் மட்டும் சத்து டானிக்கா கொடுக்கப்படுகிறது?” என்று நகைச்சுவை கலந்து பதிவு செய்திருந்தார். தெருக்கள் தோரும் மதுபானக் கடைகளைத் திறந்து வைத்து மனிதனை கொஞ்சம் கொஞ்சமாக சாகடிக்கும் செயலை விடவா கொடியது ஜல்லிக்கட்டில் உயிரிழப்பது?

ஜல்லிக்கட்டில் உயிரிழப்பதை நியாயப்படுத்தவில்லை. இதை விடக் கொடியவை பல இருந்தும், ஏன் பாரம்பரிய விளையாட்டு ஒன்று பலரின் கண்களை உறுத்துகிறது என்ற ஆதங்கம் தான் தாளவில்லை. எந்த விளையாட்டில் தான் ஆபத்தில்லை? வாகன விபத்தில் பலர் உயிரிழக்கின்ற காரணத்திற்காக வாகனங்களையே தடை செய்ய முடியுமா? எம்மண்ணின் வீர விளையாட்டினை தடை செய்வதற்கு பதிலாக, பாதுகாப்பு முறைகளை மேம்படுத்தி சில கட்டுபாட்டுக்களை விதித்து, விளையாட்டினை நடத்த அனுமதி அளித்திருந்தால் காளைகள் சீற, இளைஞர்கள் பாய,  தைப் பொங்கல் திருநாளே களை கட்டி இருந்திருக்கும்.

மேற்கத்திய கலாச்சாரங்களை நமது கலாச்சாரமாக மாற்றிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், இந்த ஒன்றாவது எம் மண்ணினுடயதாக இருந்து விட்டுப் போகட்டுமே. கதைகள், நாடகங்கள், திரைப்படங்கள் என அனைத்திலுமே ஜல்லிக்கட்டினைக் கண்டு, கேட்டு, மகிழ்ந்து, மார்தட்டி கொண்ட எமது வீரமகன்களை காளைகளை அடக்க விடாமல் அடக்குவது எவ்விதத்தில் நியாயம்? 

ஏறு தழுவுதல் ஒரு விளையாட்டு என்பதனைத் தாண்டி, எம்மண்ணிலும், மனத்திலும் தலைமுறை தலைமுறையாக கடந்து வந்த பாரம்பரியம் என்பதனை எஞ்சியோர்க்கு எப்படி உணர்த்துவது? 

மல்லுகட்டுவதைத் தவிர இந்த ஜல்லிக்கட்டுக்கு வேறு வழி இல்லை!
                                                           - வசு


No comments:

Post a Comment