Thursday, 31 July 2014

குழந்தைகள் குழந்தைகளாகவே இருக்கட்டும்!

மிட்டாய் வேண்டும், பலூன் வேண்டும், பொம்மை வேண்டும் என்று அடம் பிடிக்க வேண்டிய குழந்தைகளெல்லாம் இன்று ஐ பாட் வேண்டும், அன்ட்ராய்டு கைப்பேசி வேண்டும், காலக்சி டாப் வேண்டும் என்று மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள். கைக்குழந்தையும் கைபேசிக் கேட்கிறது! இந்தக் கருவிகளில் உள்ள அனைத்து நுணுக்கங்களையும் பத்து வயது குழந்தை கூட நன்றாக தெரிந்து வைத்துள்ளது. இன்னும் சொல்லப் போனால், நமக்கு ஏதும் பயன்பாட்டில் சந்தேகம் எழுந்தால் கூட குழந்தைகள் தீர்த்து வைக்கிறார்கள். ‘முகநூலில்  கணக்கு வைத்து உள்ளீர்களா?’ என்று ஒரு ஐந்தாம் வகுப்பு மாணவன் என்னைக் கேட்டு, என் கணக்கின் நண்பர்கள் பட்டியலில் இணைய அடுத்த நாளே விண்ணப்பம் அனுப்புகிறான். பத்து வயது சிறுவன் எனது நண்பன் என்று சொல்லிக் கொள்வதில் எனக்கு வயது குறைந்தது போல் இருக்கிறது என்றாலும், அந்த வயதிற்கான விளையாட்டுகளை விட்டு விட்டு இவன் முகநூலில் என்ன செய்கிறான் என்ற பதட்டமும் கூடவே சேர்ந்துக் கொள்கிறது! கண்ணாமூச்சி விளையாடி ஒருவரை ஒருவர் கண்டுபிடிக்க வேண்டிய வயதில் இன்று இணையத்தில் தனது நண்பர்களை தேடிக் கொண்டிருக்கிறார்கள். நண்பர்களுடன் ஓடிப் பிடித்து விளையாடிக் களைப்புற வேண்டிய பிள்ளைகள், இன்று ஏதோ ஒரு கோயில் ஓட்டத்தில் அரக்கனுடன் ஓடிக் கழுத்து வலி என்று புலம்புகிறார்கள். குழந்தைகளைச் சொல்லி ஒரு குற்றமும் இல்லை. ஐபாடு, முகநூலை விடவும் நம்மால் அவர்களுக்கு சுவாரசியத்தைக் கொடுக்க முடிவதில்லை. ‘அலுவல்’ என்று ஒற்றை வார்த்தையில் காரணம் சொல்பவர்களுக்கு ஒன்றைக் கூற விரும்புகிறேன். குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக நீங்கள் உழைக்கும் அந்த உழைப்பு உங்கள் குழந்தைகளிடமிருந்து குழந்தைத்தனத்தை பிடிங்கிக் கொள்ளும் அசுரனாய் அமைந்து விடக் கூடாது. “என் ஆறு வயது மகனுக்கு கைப்பேசியைப் பற்றி அனைத்துமே தெரியும்”, “என் பதினோரு வயது மகளுக்கு இப்பொழுதே அவள் முகபுத்தக கணக்கில் அவ்வளவு நண்பர்கள்!” என்று கூறுவதில் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்றால், மன்னிக்கவும்! இவை அனைத்தும், உங்கள் பிள்ளைகள், குழந்தைத்தனத்தை இழந்து உங்களை விட்டு மெல்ல விலகிக் கொண்டிருக்கிறார்கள் என்பதன் அறிகுறிகளே. ஓடி விளையாடுவதில் கிடைக்கும் உடல் வலுவும் கூடி விளையாடுவதில் கிடைக்கும் குதூகலமும், கீழே விழுந்து வாரிய கீறல்கள் சொல்லிக் கொடுத்த பாடங்களும், கூட்டாஞ்சோறு கற்றுக் கொடுத்த உணவுப்பழக்கத்துடன் கூடிய பகிர்ந்துண்ணுதலும், விளையாடிய களைப்பு தந்த ஆழ்ந்த உறக்கமும், இணையத்தாலும், மின்னணு சாதனங்களாலும் எக்காலத்திலும் வழங்க முடியாது! இக்கருவிகளைப் பயன் படுத்துவதால் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே, நரம்பு தளர்ச்சி முதல் மூளைக்  காய்ச்சல் வரை, வித விதமான உடல் உபாதைகள் வருவதற்கான சாத்தியக்  கூறுகள் மிக அதிகமென்று ஆய்வுகள் கூறுகின்றன. கைபேசியில் நன்றாக புகைப்படம் எடுத்தாலும், க்ரேயான்களையும், பென்சிலையும் கொண்டு, நம்மை வரைந்து, குழந்தைகள் தரும் ஆனந்தம் அளவில்லாதது. இணைய விளையாட்டுகளில் அவர்கள் எடுக்கும் புள்ளிகளை விட மணல் விளையாட்டுகளில் கட்டப்படும் வீடுகள் தான் மிகவும் அழகானவை. க்ரேயான்களையும், மணலையும் பிடுங்கிக் கொள்ளும்போது குழந்தைகளின் கற்பனைத் திறனையும் வளர்ச்சியையும் சேர்த்தே பிடுங்குகிறோம். நினைத்த மாத்திரத்தில் நிறுத்திவைக்க அனுமதிக்கப்படும் கணினி விளையாட்டுகளை மட்டுமே விளையாட அவர்களை பழக்கப் படுத்தி விட்டு, நிஜ வாழ்க்கையில் சிறிய தோல்வியினைக் கூட ஏற்க இயலாத அளவிற்கு அவர்களை வளர்த்து வருகிறோம். இதெல்லாம் சரி தான், குழந்தைகள் விளையாட இடமும், பாதுகாப்பான சூழலும் எங்கு இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம். ஊர் பேர் தெரியாத நபர்களுடன், அனைத்து விதமான ஆபத்துகளும் ஆபாசங்களும் நிறைந்த இணையத்தை விட உங்களைச் சுற்றியுள்ள சமூகம் ஒன்றும் கொடூரமானதல்ல! குழந்தைகள், பெரியவர்கள் போல் நடித்தால் மட்டும் தான் அழகு! பெரியவர்களைப் போலவே இருப்பதென்பது குழந்தைத்தனத்திற்கே இழைக்கப் படும் பெரும் பாவம்! கலாக்சி டாபையும், ஐ பாடையும் விட எழுத்துப் பலகையும் பல்பமும் தான் குழந்தைகளின் கையில் அழகாக இருக்கிறது! கிடைக்கும் நேரங்களிலெல்லாம் அவர்களுடன் விளையாடுங்கள், கதை கூறுங்கள், அவர்களின் கதையைக் கேளுங்கள், அவர்களுக்கு சுவாரசியத்தை வழங்கி, உங்கள் வாழ்வினையும் சுவாரசியம் நிறைந்தாக மாற்றிக் கொள்ளுங்கள்.      தேடு இயந்திரங்களில் உலகைத் தேட விடாமல் அவர்களை கை பிடித்துக் கூட்டி வந்து நிஜமான, அழகான உலகினை காண வையுங்கள்! தன்னலமற்ற, தன்னிகரற்ற, ஆரோக்யமான போட்டி உள்ள, போலியில்லா ஒரு சமுதாயம் அமைய வேண்டுமெனில் குழந்தைத்தனத்தை பாதுகாப்பது அவசியம்...  குழந்தைகள் குழந்தைகளாகவே இருக்கட்டும்!  
                                         -    குழந்தைகளுக்காக,
                   வசுப்ரதா ரெங்கராஜன்                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                     

No comments:

Post a Comment