குழந்தைப் பருவம் தான் எவ்வளவு இனிமையானது! சிரிப்பும் அழுகையும் மட்டுமே சிறந்த மொழிகளாகத் திகழ்ந்த நாட்கள். புதிய பொம்மைகளும் புளிப்பான மிட்டாய்களுமே அந்நாட்களின் அதிகபட்ச எதிர்பார்ப்பு. தேவைகள் தெளிவாகவும், எளியதாகவும் இருந்தன. தவறுகள் திருத்தப் பட்டதே தவிர, தவறானவனெனத் தீர்மானிக்கப் பட்டதில்லை. ஒன்றிற்கு நூறு முறை யோசித்து செயல் பட வேண்டிய அவசியம் இருந்ததில்லை. பிறரைப் பற்றி ஆராய வேண்டிய பொறுப்பும் இருந்ததில்லை. தனக்கென ஒரு உலகம், மிகவும் அழகான உலகம். அதில், தானே ராஜா, தானே மந்திரி, தானே திருடனும் கூட! பெரும்பாலும் திருடப்பட்டது என்னவோ, இதயங்கள் மட்டும் தான். உண்ணாமல், உறங்காமல், ஓயாமல் ஓடியதற்காக அன்று கண்டிக்கப்பட்டோம். சொல்லப்போனால் அவை மட்டுமே அப்பருவத்தின் அதிகபட்ச குற்றம். இழுத்த இழுவைகள் எல்லாம் இசையெனப்பட்டன. ராஜாவும் ரஹ்மானும் கூட குறைவா(க்)கப்பட்டனர். என்ன பேசினாலும் கவனிக்கப்பட்டதே தவிர, கணிக்கப் பட்டதே இல்லை. நமக்கு நாமே பேசிக்கொண்டாலும் கூட, ரசிக்கப்பட்டது. வார்தைகளுக்கெல்லாம் ‘ஒரு’ அர்த்தம் மட்டுமே இருந்த தெளிவான தினங்கள். தூங்கினால் கூட பாராட்டப்பட்டது. நண்பனாக வேண்டுமெனில் புன்னகை ஒன்றே குறைந்தபட்ச தகுதி. பெரும்பாலான சண்டைகளுக்கு மிட்டாய்களும், புதிய அழிப்பான்களும் மட்டுமே காரணமாகத் திகழ்ந்தன. தான் மட்டுமல்லாமல் அனைவருமே அழகாகத் தெரிந்தனர். பயமுறுத்தியது என்னவோ பூச்சாண்டி மட்டும் தான். பேசிய வார்த்தைகள் பெரிதும் நம்பப்பட்டது. அப்பாவிற்கு அலங்காரம் செய்தும், அம்மா அதட்டுகையில் அழுவது போல் நடித்து, தப்பித்துக்கொள்வதும், அண்ணனிடம் அடி வாங்குவதும், அக்காவின் பங்கிலும் பங்கு கிடைக்கும் தருணங்களும், தன்னை விடவும் இளைய குழந்தைகளிடம் காட்டும் குழந்தைத்தனமான பொறுப்பும், பாட்டியின் நிஜமான கதைகளும், தாத்தாவின் மூக்குக் கண்ணாடியை ஒளித்து வைத்து விளையாடிய பொழுதுகளும், அத்தை, மாமா, பெரியப்பா, பெரியம்மா, சித்தி, சித்தப்பாவின் முத்தங்களும், அண்டை வீட்டாரின் தின்பண்டங்களும், ஆசிரியரின் அதட்டல்களும், அவர் போல் நாம் நடித்து விளையாடிய ஆட்டங்களும், தோழனின் அடிகளும், தோழியின் கடிகளும், தெரிந்தோரின் ஆலிங்கனமும், தெரியாதவரின் புன்னகையும், டாமும் ஜெர்ரியும் அறிமுகமான அழகான நாட்களும் அள்ளி வழங்கிய மகிழ்ச்சியினை, ஓயாமல் பேசியபோதும் நிலவிய அமைதியினை, நினைத்தாலே இனிக்கும் இப்பருவத்தினை மீட்டெடுக்க, செத்து தான் பிழைக்க வேண்டும். உருண்டு, விழுந்து, தவழ்ந்து, எழுந்த குழந்தைப் பருவம், வாழ்க்கையின் ஒரே வரம்!
- குழந்தையென மீண்டும் மாறும் ஆசை,
வசுப்ரதா ரெங்கராஜன்.
- குழந்தையென மீண்டும் மாறும் ஆசை,
வசுப்ரதா ரெங்கராஜன்.
No comments:
Post a Comment