Wednesday, 23 July 2014

'பதிய' வேண்டியவற்றை மட்டும் பதியுங்கள்!

கர்நாடக முதலமைச்சர் அரசவையில் தூங்கினார் என்று படம் போட்டும், அதனை விவாதித்தும் பல பதிவுகள் பதியப்பட்டு வருகின்றன. முதலில், அந்தப் படம் அவர் தூங்கியதைத் தான் படம் பிடித்திருக்கிறதா அல்லது கண் சிமிட்டுகையில் படம் பிடிக்கப் பட்டதா என்பதே தெரியவில்லை. அப்படியே அவர் தூங்கித் தான் கொண்டிருந்தார் என்றாலும் ஒரு மனிதரை, இந்த அளவுக்கு சாடுவது சரி எனப்படவில்லை. இரவெல்லாம் விழித்திருந்து மிகவும் ‘அவசியமான’ வேலைகளை செய்யும் நாம், அடுத்த நாள் காலையில் பள்ளியிலோ கல்லூரியிலோ அலுவகத்திலோ கண் அசராமலே இருந்து விடுகிறோம் பாருங்கள்! அப்படி இருக்கையில், ஒரு மாநிலத்தின் முதலைமைச்சர், கோரமான சம்பவம் நிகழ்ந்திருக்கும் இத்தருவாயில் தூக்கமே இல்லாமல் அல்லல் பட்டுக் கொண்டிருப்பார் என்பது தான் உண்மை! அதற்காக நான் அரசாங்கத்திற்க்கோ அமைச்சர்களுக்கோ வக்காலத்து வாங்கவில்லை. ஒன்றுமே அறியாத ஒரு இளம் மொட்டு கசக்கிப் பிழியப்பட்ட செய்தி அனைவரையுமே கொதித்தெழத் தான் செய்துள்ளது. உங்கள் கோபங்களை இம்மாதிரியான தேவையில்லாத பதிவுகள் மூலம் தவறாக பதிவு செய்கிறீர்கள் என்பதைத் தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்த கோபம், வீரம் எல்லாம் நீங்கள் வாக்களிக்கும்போதும், உங்கள் அண்ணனோ தம்பியோ தோழனோ பெண்களைப் பற்றி தவறான ஒரு கருத்து கொண்ட போதும், கேளிக்கை நிகழ்ச்சி என்ற பெயரில் குழந்தைகளை ஆபாசப்படுத்தும்போதும், பள்ளிகள் சந்தைகளாக்கப்பட்ட போதும் இருந்திருந்தால் இன்று இந்த கொடுமையே நிகழ்ந்திருக்காது. இது போன்று சம்பவங்கள் சமீப காலங்களில் ஹோசுரிலும் திருச்சியிலும் மேலும் பல இடங்களில் நடந்த கதைகளையும் நாம் அறிவோம். தெரிந்தது சில வென்றால் தெரியாதவை பல! எவ்வளவு போராட்டங்கள் நடத்தியும் கோஷங்கள் எழுப்பியும் இம்மாதிரியான பாலியல் கொடுமைகளின் விகிதம் அதிகரித்துக் கொண்டிருப்பதின் காரணத்தை உணராமல், அவர் தூங்கினார், இவர் கொட்டாவி விட்டார், நாடு எங்கே போகிறது என்பது போன்ற வாதங்கள் எந்த விதத்தில் இந்தக் குற்றங்களை குறைக்கப்போகிறது. பேசுவதற்கு ஒன்று கிடைத்து விட்டது என்பதற்காக முக்கியமாக எதைப் பற்றி பேச வேண்டுமோ, அதை மறந்து விடாதீர்கள். குழந்தைகளைக் காது கொடுத்துக் கேட்டிருந்தால் மற்றவர்கள் அவர்களுடன் பழகும் விதம் முன்பே தெரிந்திருக்கும், கேளிக்கை என்ற பெயரில் ஆபாசத்தைத் தவிர்த்திருந்தால் ஆண்களின் பார்வையும் சீராய் இருந்திருக்கும், பெண்களைப் பற்றியும் பெண்ணியம் பற்றியும் ஆண் பிள்ளைகளுக்குச் சொல்லி வளருங்கள். ஆண்களைப் பற்றியும் அவர்களின் ஹார்மோன்கள் பற்றியும் பெண் பிள்ளைகளுக்குப் புரிய வையுங்கள். காமமும் வாழ்க்கையின் ஒரு அங்கம் தான், அதனை ஆளும் விதத்தில் தான் நாம் தீர்மானிக்கப் படுகிறோம் என்பதனை நீங்களும் முதலில் உணருங்கள். இம்மாதிரியான கொடுமைகள் நடக்கும் மாநிலத்தின் அமைச்சருக்கு மட்டுமா தூங்காமலிருக்க வேண்டிய பொறுப்பு? நமக்கில்லையா? அவ்விளம்பிஞ்சு நமக்கும் உறவில்லையா? ஒரு வகையில் சமுதாயமாகிய நாம் தான் இது போன்ற அவல நிகழ்வுகளுக்குக் காரணம் என்று உறுத்தவில்லையா? இதையெல்லாம் சிந்திக்காமல், எதைப் பேச வேண்டுமோ அதைப் பேசாமல், மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடித்துப் போட்டுக் கொண்டிருந்தால், உருண்டு கொண்டே இருக்க வேண்டியதான்! இது மாதிரியான பாலியல் கொடுமைகள் இத்தோடு முடிவுப் பெறட்டும். அதற்கான பொறுப்பு நம் கையில் தான் இருக்கிறது என்பதனை உணர்ந்து நடந்து கொள்ளுங்கள். நாளைய சமுதாயம் நம்மை கவனித்துக் கொண்டிருக்கிறது என்பதனையும் மறந்து விடாதீர்கள்!
- வசுப்ரதா ரெங்கராஜன்

No comments:

Post a Comment